ஹைப்பர்சோனிக் விமானம் தயாரிக்க பிரிட்டன் விண்வெளி முகமை திட்டம்.!
ஒலியைவிட ஐந்து மடங்கு வேகத்தில் செல்லும் ஹைப்பர்சோனிக் விமானத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ள பிரிட்டன் விண்வெளி முகமை அதற்கான ஆராய்ச்சி மற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது.
உயர் தொழில்நுட்பம் கொண்ட இவ்வகை விண்வெளி விமானங்கள் 2030ஆம் ஆண்டுக்குள் பயன்பாட்டுக்கு வரக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. மணிக்கு நாலாயிரம் மைல்கள் வரை வேகமுள்ள இந்த விமானத்தில் நியூயார்க்கில் இருந்து லண்டனுக்கு ஒரு மணி நேரத்தில் செல்லலாம் எனத் தெரிவித்துள்ளது.
இந்த விமானத்தைத் தயாரிப்பதற்காக ஆஸ்திரேலியாவுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக பிரிட்டன் விண்வெளி முகமைத் தலைமைச் செயல் அதிகாரி கிரகாம் டர்னாக் தெரிவித்துள்ளார்.
ஹைட்ரஜன், ஆக்சிஜன் கலவையை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் சாப்ரே எனப்படும் எஞ்சின் பயன்பாட்டுக்கு வந்தால் இப்போதுள்ளதை விட விமானப் போக்குவரத்துச் செலவும், அதில் வெளியாகும் மாசும் குறையும்.
ஹைப்பர்சோனிக் விமானம் அதிவேகத்தில் செல்லும்போது காற்றின் வெப்பத்தால் அதன் எஞ்சின் இளகி உருகிவிட வாய்ப்புள்ளது. சாப்ரே எஞ்சின் உள்ளிழுக்கும் காற்று ஹீலியத்தால் குளிரூட்டப்பட்ட நுண் குழாய்கள் வழியே வரும்போது ஆயிரம் டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் வரும் காற்றும் நொடியில் இருபதில் ஒருபங்கு நேரத்தில் பூஜ்யம் டிகிரி செல்சியஸ் குளிர்நிலைக்கு வந்துவிடும்.
அந்தக் காற்றில் வரும் வெப்பம் எஞ்சினுக்கு ஆற்றலாகப் பயன்படுத்தப்படும் எனப் பொறியாளர் தெரிவித்துள்ளார்.
Comments