உக்ரைன் மீதான போரைக் கண்டித்து ரஷ்யா மீது பொருளாதாரத் தடை.. ரஷ்யாவின் இறக்குமதி குறைந்த போதும் எண்ணெய் எரிவாயு ஏற்றுமதி அதிகரிப்பு
உக்ரைன் போரைக் கண்டித்து ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையால் அதன் இறக்குமதி குறைந்துள்ள அதே நேரத்தில், எண்ணெய் எரிவாயு ஏற்றுமதியால் வருவாய் மிகவும் அதிகரித்துள்ளது.
ஜனவரி முதல் மார்ச் வரையான காலாண்டில் ரஷ்யாவின் இறக்குமதியை விட ஏற்றுமதி மதிப்பு அதிகமுள்ளதால் அதன் வாணிபச் சமநிலையில் 4 இலட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாய் உபரியாக உள்ளது.
இது 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிகம் என்றும், கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததைவிட இரு மடங்குக்கும் அதிகம் என்றும் ரஷ்ய மைய வங்கி தெரிவித்துள்ளது. 14 ஆண்டுகளில் இல்லாத அளவு எண்ணெய் விலை உயர்ந்துள்ளதும் ரஷ்யாவின் வருவாய் அதிகரித்ததற்கான காரணமாகக் கூறப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்யத் தடை விதித்துள்ளதுடன், எண்ணெய் இறக்குமதிக்குத் தடை விதிக்கவும் பரிசீலித்து வருகிறது. ஆனால் எரிவாயு இறக்குமதிக்குத் தடை விதிக்கவில்லை.
உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 2 இலட்சத்து 90 ஆயிரத்து 600 கோடி ரூபாயை எண்ணெய் எரிவாயு இறக்குமதி செய்ததற்கு ஐரோப்பிய ஒன்றியம் செலுத்தியுள்ளது.
இது ரஷ்யாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்புக்குப் பெரிதும் பங்களித்துள்ளது. ரஷ்யா அதன் வெளிநாட்டுக் கடன்களை முறைப்படி திருப்பிச் செலுத்தி வருகிறது.
Comments