நவம்பர் 1 ஆம் தேதி உள்ளாட்சி தினம்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஆண்டுதோறும் இனிமேல் நவம்பர் 1-ந் தேதி உள்ளாட்சிகள் தினமாக கொண்டாடப்படும் என அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆண்டுக்கு 6 கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
சட்டப்பேரவையில் 110விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆண்டுதோறும் இனி நவம்பர் 1-ந் தேதி உள்ளாட்சித் தினமாக கொண்டாடப்படும் என அறிவித்தோடு, இதுவரை ஆண்டுக்கு நான்கு முறை நடத்தப்பட்டு வந்த கிராம சபை கூட்டம், இந்த ஆண்டு முதல் ஆறு முறை நடத்தப்படும் என தெரிவித்தார்.
மேலும், மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பிரதிநிதிகளுக்கு கூட்டங்களில் கலந்து கொள்ளும் நாட்களில் அமர்வு படி தொகை பத்து மடங்காக உயர்த்தி வழங்கப்படும் எனவும், அதேபோல, கிராம ஊராட்சித் தலைவர், கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கான அமர்வு படி தொகை ஐந்து மடங்காக உயர்த்தி வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழகத்திலுள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்களுக்கும் புதிய வாகனங்கள் வழங்கப்படும் என அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறப்பாக செயல்படும் ஊராட்சிகளுக்கு இந்த ஆண்டு முதல் உத்தமர் காந்தி விருதும், ஆண்டுதோறும் மாவட்டத்திற்கு ஒரு ஊராட்சி ஒன்று வீதம் சிறந்த 37 கிராம ஊராட்சிகளுக்கு தலா பத்து லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
Comments