இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுடன், பிரதமர் நரேந்திரமோடி பேச்சுவார்த்தை

0 3452
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுடன், பிரதமர் நரேந்திரமோடி பேச்சுவார்த்தை

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் 2 நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார். குஜராத் சென்ற அவர் அங்குள்ள மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்தை பார்வையிட்டதோடு, தொழில் முதலீடுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து நேற்று இரவு அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட போரிஸ் ஜான்சன் டெல்லி வந்து சேர்ந்தார். குடியரசுத் தலைவர் மாளிகையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

காரில் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வந்திறங்கிய போரிஸ் ஜான்சனை பிரதமர் நரேந்திர மோடி கைகுலுக்கி வரவேற்றார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய போரிஸ் ஜான்சன், அருமையான வரவேற்புக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான உறவு, இவ்வளவு வலுவாகவும், சிறப்பாகவும் இருக்கும் என தாம் நினைக்கவில்லை என போரிஸ் ஜான்சன் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து டெல்லியிலுள்ள ஹைதராபாத் இல்லத்தில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுடன்  பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாட்டைச் சேர்ந்த பல்வேறு துறைகளின் பிரதிநிதிகளும் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.

பாதுகாப்பு, வர்த்தகம், எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு வலுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடியும், போரிஸ் ஜான்சனும் ஆலோசனை நடத்தினர்.

மேலும், இந்தியாவில் இருந்து இங்கிலாந்து செல்வோருக்கான விசா நடைமுறைகளை எளிமைப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.இருநாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments