தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இரவு, பகல் என மின்வெட்டு ஏற்பட்டதால் மக்கள் கடும் அவதி.!
திருச்சி, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இரவு பகல் என மின்வெட்டு ஏற்பட்டதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
திருச்சி மாநகரப் பகுதிகளான உறையூர், ஸ்ரீரங்கம், சத்திரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென மின் வெட்டு ஏற்பட்டதால் வீடுகளுக்குள் இருக்க முடியாமல் மக்கள் காற்றோட்டத்திற்காக வீதிகளை நோக்கி படையெடுத்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 6 மணி நேரத்திற்கு மேலாக மின் தடை ஏற்பட்டதால் விளக்கு வெளிச்சத்தில் மாணவர்கள் பாடம் படித்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், செந்துறை, திருமானூர், ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகளில் இரவில் மூன்று மணிநேரத்திற்கும் மேலாக மின் தடை ஏற்பட்டதால் புழுக்கம் தாங்க முடியாமல் வீடுகளை விட்டு வெளியே வந்து அமர்ந்திருந்தனர்.
அதேபோல் தேனி, தென்காசி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விட்டு விட்டு ஏற்பட்ட மின் வெட்டுகளால் சிறு குறு வியாபாரிகள், பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இதனிடையே மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் 750 மெகா வாட் மின்சாரம் தடைபட்டதால், சில இடங்களில் ஏற்பட்ட மின்பற்றாக்குறையை சமாளிக்க மின் வெட்டு ஏற்பட்டதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
நகர்பபுறங்களில் உடனடியாக நிலைமை சரி செய்யப்பட்டதாகவும், ஊரகப் பகுதிகளிலும் அடுத்த 15 நிமிடங்களில் நிலை சீரடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மின் வாரியத்தின் உற்பத்தித்திறனை உடனடியாக அதிகரிக்கவும், தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
Comments