தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவு!
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததின் எதிரொலியாக, தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்த அறிக்கையில், குறித்த காலத்திற்குள் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத சுமார் ஒன்றரை கோடி பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதியவர்கள் மற்றும் இணை நோய் பாதிப்பு இருப்பவர்களை கண்டறிந்து பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி, மாணவர்களுக்கான தடுப்பூசி திட்டத்தை தீவிரபடுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், உடனுக்குடன் ஆர்.டி.பி.சி.ஆர் மற்றும் பகுப்பாய்வு பரிசோதனை செய்யவும், அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்தி, தயார் நிலையில் இருக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளான, பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவெளியை பின்பற்றுதல், அடிக்கடி கைகளை கழுவுதல் உள்ளிட்ட வழிகாட்டுதல்களை தவறாமல் பின்பற்றவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், தற்போதைய சூழலில் தமிழகத்தில் ஒமைக்ரான் BA2 வைரஸ் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளதாகவும், XE வகை பாதிப்பு இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Comments