இப்ப என்னாச்சுன்னா ப்ரெண்ட்ஸ் வலிமை, பீஸ்ட் ரெண்டுமே தமிழகத்தில் பெஸ்ட்டு தான்..! திருப்பூர் சுப்பிரமணியம் யூடர்ன்..!
வலிமை பீஸ்ட் ஆகிய இரு தமிழ் படங்களுமே திரையரங்கில் சிறப்பான வசூலை ஈட்டியதாக பேட்டி அளித்த திருப்பூர் சுப்பிரமணியம், அடுத்த சில நொடிகளிலேயே கடந்த 6 வருடங்களில் தமிழில் ஒரு படம் கூட தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களுக்கு லாபம் ஈட்டி தரவில்லை என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் கே.ஜி.எப் சேப்டர் 2 திரைப்படம் வசூல் சாதனை புரிந்து வருகின்றது. படம் வெளியான 6 நாட்களில் 600 கோடி ரூபாயை தாண்டி வசூலித்து உள்ளது. இந்த படத்தின் மாபெரும் வெற்றி தமிழ் திரை உலகினரை மட்டுமல்ல, திரையரங்க உரிமையாளர்களையும் திகைப்பில் ஆழ்த்தி உள்ளது.
கடந்த காலங்களில் தமிழில் வெளியான எந்த ஒரு நல்ல படத்திற்கும் வாழ்த்து தெரிவித்து கருத்து பதிவிடாத விஷால் , கார்த்தி போன்றோர் கூட கே.ஜி.எப் 2 படத்தை புகழ்ந்து தங்கள் கருத்துக்களை டுவிட்டரில் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழ் திரையுலகிற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து பேசிய விநியோகஸ்தரும், திரையரங்க உரிமையாளர் சங்க தலைவருமான திருப்பூர் சுப்பிரமணியம், இந்த ஆண்டு வெளியான வலிமை, பீஸ்ட் ஆகிய இரு படங்களுமே வசூல் சாதனை புரிந்ததாகவும், தமிழகத்தில் இந்த படங்களின் வசூல் சாதனையை பேன் இண்டியா படங்களான புஷ்பா, ஆர்.ஆர்.ஆர் படங்களால் கூட நெருங்க முடியவில்லை என்றும், 1100க்கும் அதிகமாக திரையரங்குகளில் வெளியானதால் முதல் நாளில் பீஸ்ட் திரைப்படம் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை படைத்தது என்றும் தற்போதைய நிலையில் கே.ஜி.எப் 2 படத்தை பொறுத்தவரை தமிழகத்தில் பீஸ்ட் டை காட்டிலும் 30 சதவீதம் மட்டுமே வசூல் ஈட்டியுள்ளது என்றார்.
ஆரம்பத்தில் பீஸ்டை வசூல் சாதனை என்று உயர்த்தி பேசிய திருப்பூர் சுப்பிரமணியம் அடுத்த சில நொடிகளில் எல்லாம் தமிழ் திரைப்படங்களில் தொடர் தோல்விக்கு ஹீரோக்கள் அதிக சம்பளம் பெறுவது தான் காரணம் என்றும் படத்தின் காட்சிகளுக்கான தயாரிப்பு செலவை குறைத்து நடிகர்களுக்கு அதிக தொகை வழங்கப்படுவதால், கடந்த 6 வருடங்களில் ஒரு படம் கூட தயாரிப்பாளர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும், வினியோகஸ்தர்களுக்கும் லாபத்தை சம்பாதித்து கொடுக்க வில்லை என்று யூடர்ன் அடித்தார்.
பீஸ்ட் படத்தை வருகின்ற ஞாயிற்றுக்கிழமை வரை திரையரங்குகளில் திரையிட வேண்டும் என்ற ஒப்பந்தம் இருப்பதால் ஒரு திரையரங்கு மட்டும் வைத்திருக்கும் உரிமையாளர்கள் , வசூலை வாரிக்குவிக்கும் கே.ஜி.எப் 2 திரைப்படத்தை தங்கள் திரையரங்குகளில் வெளியிட இயலவில்லையே என்ற ஏக்கத்தில் உள்ளனர். பீஸ்ட் வெளியிட்டால் 15 முதல் 25 சதவீத பங்கு மட்டுமே திரையரங்குகளுக்கு என்று அறிவிக்கப்பட்ட நிலையில், கே.ஜி.எப் 2 படத்துக்கு 50 சதவீத தொகையை திரையரங்குகளுக்கு பங்காக கொடுப்பதால் அந்த படத்தை வெளியிட்டவர்கள் ஜாக்பாட் அடித்த மகிழ்ச்சியில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Comments