டேபிள் டென்னிஸ் சாம்பியன் விஸ்வா பலியான சோகம்.. லாரி தறி கெட்டு ஓடிய பின்னணி.!
சென்னை லயோலா கல்லுரியில் படித்து வந்த இளம் டேபிள் டென்னிஸ் சாம்பியனான விஸ்வா, மேகாலயாவில் நடந்துவரும் போட்டியில் பங்கேற்க சென்ற நிலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். தற்கெட்டு ஓடிச்சென்ற லாரி எதிர் திசையில் வந்த விஸ்வாவின் கார் மீது பாய்ந்த பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..
15 வயதில் ... கடந்த 2019 ஆம் ஆண்டு... தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தவர் விஸ்வா தீனதயாளன். தற்போது சென்னை லயோலா கல்லூரியில் முதலாம் ஆண்டு வணிகவியல் பட்டப்படிப்பு படித்து வந்தார்.
83 வது தேசிய சீனியர் டேபிள் டென்னிஸ் போட்டியில் தமிழகம் சார்பாக பங்கேற்பதற்காக விஸ்வா தீனதயாளன் சென்றிருந்தார்.
சம்பவத்தன்று விஸ்வா, சக போட்டியாளர்களுடன் சேர்ந்து காரில் பயணித்தார். கார் ஷாங்பங்க்களா என்னுமிடத்தில் சென்று கொண்டிருந்த போது எதிர் திசையில் வந்த டிரைலருடன் கூடிய லாரி ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மத்திய தடுப்பை தாண்டி விஸ்வா பயணித்த கார் மீது பயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில் காரின் ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். பலத்தகாயங்களுடன் மீட்கப்பட்ட விஸ்வா சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் விஸ்வா உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். லாரி ஓட்டுனர் உறங்கியதால் இந்த கோர விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
பிணகூறாய்வுக்கு பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் விஸ்வாவின் உடல் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சாதனையாளனாக சென்ற தனது மகன், சடலமாக வருவதை கண்டு அவரது பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது
கடந்த 2018 ஆம் ஆண்டில் மட்டும் அடுத்தடுத்து பல்வேறு போட்டிகளில் வென்று நாட்டின் சிறந்த 15 டேபிள் டென்னிஸ் வீரர்களில் ஒருவரானார் விஸ்வா. 2019 ஆம் ஆண்டு மிசோராமில் நடந்த தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
அப்போது அவருக்கு வயது 15 தான் என்பது குறிப்பிடத்தக்கது. கவுகாத்தி போட்டியை தொடர்ந்து வருகிற ஏப்ரல் மாதம் ஆஸ்திரியாவின் வின்ஸி நகரில் நடக்க உள்ள சர்வதேச போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க இருந்தார் விஸ்வா. அதற்குள்ளாக காலனாக வந்த லாரியால் விஸ்வாவின் உயிர் பறி போய் விட்டதாக உறவினர்கள் கண்ணீர் மல்க கூறினர்.
விஸ்வாவை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு , தமிழக அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதனை தொடர்ந்து அமைச்சர் மெய்ய நாதன் இழப்பீட்டு தொகையை விஸ்வாவின் குடும்பத்தினரிடம் வழங்கி ஆறுதல் கூறினார்.
விஸ்வாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி,சக வீரர்களால் போற்றப்பட்ட விஸ்வா, பல போட்டிகளில் பங்கேற்று தனித்து விளங்கியதாக கூறியுள்ளார். விஸ்வா மறைவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 18 வயதே ஆன இளம் டென்னிஸ் சாம்பியன் விஸ்வாவின் இழப்பு தமிழக விளையாட்டு துறைக்கு பேரிழப்பு .
இந்த நிலையில் சென்னை அண்ணாநகரில் உள்ள இல்லத்தில் இருந்து விஷ்வாவின் உடல் ஊர்வலமாக வில்லிவாக்கம் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்றதன் காரணமாக, விஷ்வாவின் உடலில் தேசியக் கொடி போர்த்தப்பட்டு இறுதி ஊர்வல வாகனத்திலும் தேசியக் கொடி கட்டப்பட்டிருந்தது. சக விளையாட்டு வீரர்கள், நண்பர்கள், உறவினர்கள் என ஏராளமானோர் இறுதி ஊர்வலத்தில் கண்ணீர் மல்க பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
Comments