தண்ணீரைப் பீய்ச்சியடித்துக் கள்ளழகரை வரவேற்ற பக்தர்கள்.. வெள்ளிக்குதிரையில் வந்த வீரராகவர் கள்ளழகரை வரவேற்றார்

0 2400
தண்ணீரைப் பீய்ச்சியடித்துக் கள்ளழகரை வரவேற்ற பக்தர்கள்.. வெள்ளிக்குதிரையில் வந்த வீரராகவர் கள்ளழகரை வரவேற்றார்

சித்திரைத் திருவிழாவில் பச்சைப் பட்டுடுத்திக் குதிரை வாகனத்தில் மதுரைக்கு வந்த கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிப் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். அவர் மீது தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் கோவிந்தா என முழங்கியும் பக்தர்கள் வழிபட்டனர்.

ஆண்டுதோறும் சித்திரை முழுநிலவு நாளில் மதுரை வைகையாற்றில் தவளை வேடத்தில் இருக்கும் மண்டூக முனிவருக்குக் கள்ளழகர் சாப விமோசனம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

மதுரை மாவட்டம் அழகர் கோவிலில் சித்திரைத் திருவிழா கடந்த செவ்வாயன்று தொடங்கியது. சுந்தராஜ பெருமாள் கள்ளழகர் வேடமிட்டு மதுரை நோக்கிப் புறப்பட்டு வந்தார். மதுரைக்கு வரும் வழியில் பல்வேறு மண்டகப்படிகளில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

நேற்று மதுரைக்கு வந்த கள்ளழகருக்கு மூன்றுமாவடியில் எதிர்சேவை நடைபெற்றது. அதன்பின் புதூர், ஆத்திக்குளம், சொக்கிக்குளம், தல்லாக்குளம் ஆகிய பகுதிகளில் மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளினார். அப்போது வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கைகளில் சர்க்கரைத் தீபத்தை ஏந்திக் கள்ளழகரை வரவேற்றனர்.

 

நேற்றிரவு தல்லாக்குளம் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம் நடைபெற்றது. இன்று அதிகாலையில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்த கள்ளழகர் வெட்டிவேர் சப்பரத்திலும் அதன் பின்னர் ஆயிரம்பொன் சப்பரத்திலும் எழுந்தருளினார்.

 

கருப்பண்ணசாமி கோவிலில் இருந்து தங்கக்குதிரை வாகனத்தில் ஏறி வைகை ஆற்றுக்குப் புறப்பட்ட கள்ளழகரைப் பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சியடித்தும், ஆடிப்பாடியும் வரவேற்றனர். தங்கக் குதிரை வாகனத்தில் வைகையாற்றுக்குள் கள்ளழகர் வந்தபோது வெள்ளிக்குதிரையில் வந்த வீரராகவ பெருமாள் அவரை வரவேற்றார்.

 

பச்சை பட்டுடுத்த கள்ளழகர் தமேரி இலைகள், மலர்களால் நிரப்பப்பட்டிருந்த வைகையாற்றில் எழுந்தருளிப் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

 

வைகையாற்றில் உள்ள மண்டகப்படியில் கள்ளழகருக்கும் வீர ராகவ பெருமாளுக்கும் சிறப்பு பூஜைகள் தீபாராதனைகள் செய்யப்பட்டன. வைகையாற்றில் அதிக அளவில் தண்ணீர் பாய்ந்ததால் பக்தர்கள் ஆற்றில் இறங்க அனுமதிக்கப்படவில்லை.

இதனால் பாலங்களின் மீதும் கட்டடங்களின் மீதும் நின்ற பக்தர்கள் விழாவைக் கண்டுகளித்தனர். பச்சைப் பட்டுடுத்து வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளியதால் மாதம் மும்மாரி பொழிந்து வேளாண்மை செழிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments