சீனாவை எதிர்கொள்ள தயாராகிறது இந்திய ராணுவம்

0 3799
சீனாவை எதிர்கொள்ள தயாராகிறது இந்திய ராணுவம்

சீனாவுக்கு எதிராக இந்திய ராணுவத்தை முழுவீச்சில் தயார்படுத்தும் பணிகளை மத்திய அரசு தொடங்கி உள்ளது. ராணுவ வீரர்களுக்கு சீனா மொழி பயிற்சி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நாட்டின் வடக்கு எல்லையில் உள்ள லடாக் பிராந்தியத்தில் இரு ஆண்டுகளுக்கு நிகழ்ந்த கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பின்னர், இந்திய ராணுவம் முழு வீச்சில் சீனாவை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.

வருகிற 18 ஆம் தேதி தொடங்கி 22 ஆம் தேதி வரை ராணுவ கமாண்டர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டின் போது, எல்லையில் ராணுவத்தின் நிலையை பலப்படுத்துவது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து முடிவு எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உக்ரைன் - ரஷ்யா போரில் இருந்து கற்றுள்ள பாடங்களின் படி இந்திய ராணுவத்தில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படுமென தெரிகிறது.

மேலும் சீன ராணுவத்தை எதிர்கொள்ள அந்நாட்டு மொழியை இந்திய ராணுவம் கற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர். ஏற்கனவே ராணுவ வீர ர்களுக்கு திபேத் மொழி, பாரம்பரியம், கலாச்சாரம், உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கும் பணி தொடங்கி உள்ளது.

இந்த நிலையில் சிம்லாவில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியை சேர்ந்த மேஜர் ஜெனரல் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும்,இந்த குழு, இந்திய ராணுவத்திற்கு சீனா மொழி, கலாச்சாரம், உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிப்பது பற்றிய முழு திட்ட அறிக்கையை தயார் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

விரிவான வெளிநாட்டு மொழி பயிற்சித் திட்டம் என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் படி, இந்திய ராணுவத்தினருக்கு சீன மொழியில் பயிற்சி அளிக்கப்படுமென தெரிகிறது.

இந்த திட்டத்தின் முன்னோடியாக ஏற்கனவே அதிகாரிகள் மற்றும் இளநிலை அதிகாரிகள் 20 பேருக்கு சீன மொழியில் டிப்ளமோ, மற்றும் பட்ட மேற்படிப்பு பயிற்சி, காந்திநகரில் உள்ள ராஷ்ட்ரிய ரக்சா பல்கலைகழகத்தில் அளிக்கப்பட்டு வருவதாக ராணுவத்தினர் கூறியுள்ளனர்.

நாட்டில் உள்ள இதர பல்கலை கழகங்களில் ராணுவத்தினர் சீன மொழியில் பட்ட மேற்படிப்பு படிப்பதற்காக கூடுதல் இட ஒதுக்கீடு செய்யவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

சீன மொழி, கலாச்சாரம், அரசியல், அந்நாட்டு பழக்க வழக்கங்கள் ஆகியவற்றில் இந்திய ராணுவம் அத்துபடியாக வேண்டுமென மத்திய அரசு விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இனி மேல் சீனா உடனான எல்லை காவல் பணிக்கு செல்லும் அதிகாரிகள் நீண்ட காலம் அங்கேயே பணியாற்றும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments