நரிக்குறவர் இன வீட்டில் காலை உணவு சாப்பிட்டு தேநீர் அருந்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே நரிக்குறவர் இன மக்களின் குடியிருப்புகளுக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அடிப்படை வசதிகளை ஆய்வு செய்ததோடு, அங்குள்ள வீட்டில் கறிக்குழம்புடன் காலை உணவும், தேநீரும் அருந்தினார்.
ஆவடி அருகே பருத்திப்பட்டு பகுதியில் வசித்து வரும் நரிக்குறவ இன பள்ளி மாணவிகள் மூன்று பேர் தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி பேசிய வீடியோ வெளியான நிலையில், அந்த பகுதிக்கு உடனடியாக அடிப்படை வசதிகளை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
மேலும், அந்த மாணவிகளுடன் வீடியோ காலில் பேசிய முதலமைச்சர், அவர்களது குடியிருப்புக்கு நேரில் வருவதாக கூறியிருந்தார். அதன்படி, பருத்திப்பட்டு மற்றும் திருமுல்லைவாயல் ஜெயா நகர் பகுதியில் வசிக்கும் நரிக்குறவ இன மக்களுக்கு சாலை வசதி, கழிவறை, தெருவிளக்கு, மின்சார வசதி உள்ளிட்டவை செய்து கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில், அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நரிக்குறவ பயனாளிகள் சுமார் 200 பேருக்கு குடும்ப அட்டை, மருத்துவ காப்பீடு அட்டை, முதியோர் உதவித் தொகை, சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து, அங்குள்ள பொதுமக்கள், மாணவ, மாணவிகளை சந்தித்து அவர்களோடு முதலமைச்சர் கலந்துரையாடினார். பலர் முதலமைச்சருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
வீடியோவில் பேசியிருந்த திவ்யா என்ற மாணவியின் வீட்டுக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாசிமாலை அணிவித்தும், பூ கொடுத்தும் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, அந்த வீட்டில் தேநீர் அருந்திய முதலமைச்சர், இட்லி, வடை, கறிக்குழம்புடன் காலை உணவு சாப்பிட்டார்.
இதனையடுத்து, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பேசிய முதலமைச்சர், காரத்துடன் கறிவிருந்து சாப்பிட்டு வந்ததாக கூறியதோடு, விளிம்பு நிலை மக்களுக்கு என்றைக்கும் தி.மு.க. அரசு துணை நிற்கும் என உறுதியளித்தார்.
Comments