தமிழ் புத்தாண்டு தினம்.. கோவில்களில் சிறப்பு தரிசனம்.!
தமிழ் புத்தாண்டு தினத்தை ஒட்டி தமிழகம் முழுவதும் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்ற நிலையில், ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத பிறப்பான ஏப்ரல் 14-ந் தேதி தமிழ் வருட பிறப்பாக கொண்டாடப்படுகிறது. இன்று பிலவ ஆண்டு முடிந்து, சுபகிருது எனும் தமிழ்ப் புத்தாண்டு பிறந்தது. இதையொட்டி தமிழகம் முழுதும் கோலாகலமாக, கோவில்களில் சிறப்பு வழிபாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
பாரம்பரிய முறைப்படி கொண்டாட்டத்துடன், மக்கள் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர். திருச்செந்தூர் சுப்பிரமணியன் சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டை ஒட்டி அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். கனி காணும் நிகழ்ச்சியும் விமரிசையாக நடைபெற்றது
கோயம்புத்தூர் மாவட்டம் புலியகுளம் பகுதியில் அமைந்துள்ள முந்தி விநாயகருக்கு 2 டன் எடையிலான பழங்களை கொண்டு ராஜ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பின்னர், பஞ்சமுக தீப தூப ஆராதனை செய்யப்பட்டு, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல, காட்டூரில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் 5 கோடி அளவிலான ரூபாய் நோட்டுக்களால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
breath
சேலத்தில் ஸ்ரீ ராஜகணபதி ஆலயத்தில் சுவாமிக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி நான்கு ரத வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், தொடர் விடுமுறையை ஒட்டி ராமேஸ்வரத்திலுள்ள சுற்றுலா தளங்களிலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் தீர்த்தக்குடங்கள் ஏந்தியும், காவடி எடுத்தும் மேளதாளத்துடன் கிரிவலப்பாதையில் ஊர்வலமாக வந்து மலை மீது ஏறி முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் விநாயகர் கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி நேராக விழும் அரிய நிகழ்வு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழ் புத்தாண்டை ஒட்டி சிறப்பு யாகசாலை அமைக்கப்பட்டு கணபதி ஹோமம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து கணபதிக்கு 26 வகையான அபிஷேக பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும், அங்குள்ள ஆஞ்சநேயர் கோவிலில் 10008 பழங்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.
Comments