இன்று முதல் செப்டம்பர் 30 வரை பஞ்சு இறக்குமதி மீதான சுங்க வரி ரத்து
நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு காரணமாக, தொழில் பாதிப்புகளால் பல்வேறு சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
இந்தியாவில் பருத்தி விளைச்சல் குறைவாக உள்ளதாலும், ஜின்னிங் மில்களில் பல்வேறு வகையான பருத்திகள் கலக்கப்படுவதாலும், தரமான பஞ்சு கிடைப்பதில்லை.
நூற்பாலைகளுக்கு பஞ்சு கிடைப்பதில் பற்றாக்குறை நீடித்து வருகிறது. பஞ்சு விலை உயர்வால், நூல் விலையும் உயர்ந்து வருகிறது. இதனால், ஏற்றுமதியும் பாதிப்பிற்குள்ளாகி வருகிறது.
தற்போது பஞ்சு இறக்குமதிக்கு 5 சதவீத அடிப்படை சுங்கவரியும், 5 சதவீத வேளாண்மை உள்கட்டமைப்பு மேம்பாட்டு வரியும் விதிக்கப்படுகின்றன. உள்நாட்டில் விலையைக் குறைக்கும்வகையில் இந்த வரிகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டது.
இந்நிலையில் இன்று முதல் வருகிற செப்டம்பர் 30-ந் தேதி வரை பஞ்சு இறக்குமதிக்கான சுங்கவரி ரத்து செய்யப்படுவதாக நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த முடிவால், ஜவுளித் தொழில்துறையும், நுகர்வோரும் பயனடைவார்கள் என்று கருதப்படுகிறது.
ஜவுளி ஏற்றுமதித் துறைக்கும் இந்த சுங்க வரி ரத்து என்பது பலன் தரும் என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
Comments