கர்நாடக அரசு ஒப்பந்தக்காரரை தற்கொலைக்குத் தூண்டியதாக அமைச்சர் ஈஸ்வரப்பா மீது குற்றச்சாட்டு

0 9899
கர்நாடக அரசு ஒப்பந்தக்காரரை தற்கொலைக்குத் தூண்டியதாக அமைச்சர் ஈஸ்வரப்பா மீது குற்றச்சாட்டு

கர்நாடகத்தில் ஒப்பந்தக்காரரைத் தற்கொலைக்குத் தூண்டியதாக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஈஸ்வரப்பா மீது வழக்குப் பதிந்துள்ள நிலையில் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் காங்கிரஸ் கட்சியினர் கோரியுள்ளனர்.

ஊரக வளர்ச்சித் துறைப் பணிகளை ஒப்பந்தம் பெற்றுச் செய்து வந்த சந்தோஷ் பாட்டீல் உடுப்பி விடுதியில் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன் அவர் எழுதியுள்ள கடிதத்தில், அமைச்சர் ஈஸ்வரப்பாவின் ஆட்கள் பசவராஜ், ரமேஷ் ஆகியோர் தன்னிடம் 4 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தில் 40 விழுக்காடு தொகையைக் கமிஷனாகக் கேட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தன்னுடைய சாவுக்குக் காரணம் அமைச்சர் ஈஸ்வரப்பாவே பொறுப்பு எனக் கூறியுள்ளதுடன், தனது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் உதவும்படி பிரதமர், முதலமைச்சர், எடியூரப்பா ஆகியோருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து சந்தோசின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில், சந்தோசைத் தற்கொலைக்குத் தூண்டியதாக அமைச்சர் ஈஸ்வரப்பா, அவருடைய ஆட்களான பசவராஜ், ரமேஷ் ஆகியோர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

இது குறித்து விரைவான வெளிப்படையான விசாரணை நடத்த முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார். இதனிடையே கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் சிவக்குமார், சித்தராமையா ஆகியோர் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டைச் சந்தித்து அமைச்சர் பதவியில் இருந்து ஈஸ்வரப்பாவை நீக்கக் கோரிக் கடிதம் வழங்கியுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments