போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை இயக்க ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் 90 விமானிகளுக்கு தடை
போயிங் 737 மேக்ஸ் ரக விமானத்தை இயக்க, ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் 90 விமானிகளுக்கு இந்திய விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக டி.ஜி.சி.ஏ தலைவர் அருண் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், 90 விமானிகளும் முறையாக பயிற்சி பெறவில்லை என்ற காரணத்தால் தற்போதைக்கு இந்த தடை விதிக்கப்படுவதாகவும் விமானிகள் மேக்ஸ் சிமுலேட்டர் முறையில், டிஜிசிஏ திருப்தி அடையும் வகையில் மீண்டும் பயிற்சி பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் தற்போது 11 மேக்ஸ் ரக விமானங்களை இயக்கி வருகிறது.
இந்த விமானங்களை இயக்க மொத்தமாக 650 விமானிகள் பயிற்சி பெற்றுள்ளனர். அவர்களுள் 90 பேருக்கு தடை விதிக்கப்பட்டதால், மேக்ஸ் ரக விமானங்களை இயக்குவதில் எவ்வித பாதிப்பும் இருக்காது எனவும் வழக்கம் போல விமானங்கள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments