விஜய் ரசிகர்கள் கண்ணீர் கரூரில் பீஸ்ட் வெளியாகாது திரையரங்கு உரிமையாளர்கள் அறிவிப்பு..! பீஸ்ட் மோடு ஆப் ஆன பரிதாபம்..!
கரூரில் நடிகர் விஜய்யின் பீஸ்ட் படம் வெளியாகாது என்று திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்துள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்திற்கு ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. தொடர்ச்சியாக 4 நாட்கள் அரசு விடுமுறையில் படம் திரையரங்குகளில் வெளியாவதால் வசூலை அள்ளிவிடலாம் என்று பல திரையரங்கு உரிமையாளர்கள் போட்டிப்போட்டு திரையிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பீஸ்ட் படத்திற்கான வியாபார முறையில் வசூலில் வினியோகஸ்தர் 70 சதவீதம் கேட்டதாகவும், 65 சதவீதம் மட்டுமே தர இயலும் என்று கரூர் மாநகராட்சிக்குட்பட்ட 7 திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 3 தினங்களாக நடந்து வந்த பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்த நிலையில் 5 சதவீத பங்கு தொகைக்கு ஏற்பட்ட இழுபறியால் பீஸ்ட் படத்தை திரையிடுவதில்லை என்று முடிவு செய்துள்ளதாக அந்த திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது வருகின்ற பெரும்பாலான திரைப்படங்கள் 3 வது வாரத்திலேயே ஓடிடி மற்றும் டிவியில் வெளியிடப்படுவதால் தங்கள் வசூல் பாதிக்கும் நிலை உருவாகி உள்ளதாக விளக்கம் தெரிவிக்கும் திரையரங்கு உரிமையாளர்கள், வழக்கமாக மற்ற படங்களுக்கு 55 முதல் 60 சதவீத பங்கை மட்டுமே வினியோகஸ்தர்கள் பெற்று வந்த நிலையில் பீஸ்ட் படத்திற்கு கூடுதலாக 10 சதவீதம் பங்கு கேட்பதால் தங்களுக்கு பெரிய அளவில் நட்டம் ஏற்படும் என்பதால் பீஸ்ட் படத்தை திரையிட இயலாத நிலை உருவாகி உள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
இந்த நிலையில் கரூர் சினிமாஸ் என்கின்ற டிவிட்டர் பக்கத்தில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திரையரங்குகளில் பீஸ்ட் திரைப்படம் வெளியிடவில்லை என்று அதிகாரப் பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.
அதே நேரத்தில் ஒரு சில மாவட்டங்களில் பீஸ்ட் படத்திற்கு உள்ள எதிர்பார்ப்பால் 70 சதவீதம் தொடங்கி அதிகட்சமாக 85 சதவீதம் வரை வினியோகஸ்தர்களிடம் பங்கு கொடுப்பதாக ஒப்பந்தம் போட்டு சில திரையரங்குகள் பீஸ்ட் படத்தை வாங்கி திரையிட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அதே நேரத்தில் இந்த தகவல் அறிந்த கரூர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சோகத்தில் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
Comments