இன்ஸ்டாகிராமில் போலி புகைப்படம், பெயரில் பெண்களுடன் சாட்டிங்.. காதலிப்பதாகக் கூறிய பெண்களிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்று மோசடி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நண்பனின் புகைப்படத்தை பயன்படுத்தி, இன்ஸ்டாகிராமில் போலி கணக்குத் துவங்கி, பெண்களை காதல் வலையில் வீழ்த்தி பணம் பறித்த நபரை சம்மந்தப்பட்ட அந்த நண்பன் புத்திசாலித்தனமாக செயல்பட்டு போலீசில் ஒப்படைத்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் அருணகிரிசத்திரம் பகுதியைச் சேர்ந்தவன் 24 வயதான பயாஸ். இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்திருக்கும் பயாஸ், பெண்களுடன் சாட்டிங் செய்வது, அவர்களை காதல் வலையில் வீழ்த்தி பணம் பறிப்பது உள்ளிட்ட செயல்களில் ஆர்வமாக இருந்திருக்கிறான்.
பயாஸின் நட்பு வட்டத்தில் நண்பனின் நண்பனாக இருந்த பையூர் கிராமத்தைச் சேர்ந்த ரகு என்பவருக்கு பாயாஸை விட அதிகமான பெண் பின் தொடர்பாளர்கள் இருந்துள்ளனர்.
தன்னைவிட ரகு அழகாக இருப்பதால் அவருக்கு பெண் நண்பர்கள் அதிகமாக உள்ளதாக எண்ணிய பயாஸ், அவரது புகைப்படத்தை சமூக வலைதளங்களில் இருந்து எடுத்து, போலியான பெயரில் இன்ஸ்டாகிராமில் ஒரு கணக்கைத் துவங்கியுள்ளான்.
அந்தக் கணக்கை வைத்து நூற்றுக்கணக்கான பெண் தோழிகளைப் பெற்ற பயாஸ், இரவு பகலாக அவர்களுடன் சாட்டிங் செய்து வந்துள்ளான். இன்ஸ்டாகிராமை எப்போதாவது பயன்படுத்தும் பழக்கம் கொண்ட ரகு, 3 மாதங்களுக்கு முன் ஒருநாள் தனது புகைப்படத்துடன், வேறு பெயரில் ஒரு போலி கணக்கு உலவுவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
அந்தக் கணக்கில் இணைப்பில் இருக்கும் தனது நண்பர்கள் மூலம் அது பயாஸ் எனத் தெரிந்துகொண்டுள்ளார். பயாஸை சந்தித்து கண்டித்த ரகு, அவன் மன்னிப்புக் கேட்டதால் எச்சரித்துவிட்டுச் சென்றுள்ளார்.
ஆனால் அதன் பிறகும் தனது அட்டகாசத்தை நிறுத்தாத பயாஸ், பெண்களோடு சேட்டிங் செய்து அவர்களிடமிருந்து பணம் பறித்ததாகவும் கூறப்படுகிறது. இந்தத் தகவல் ரகுவுக்குத் தெரியவந்து ஆத்திரமடைந்த அவர், இந்த முறை பயாஸை கையும் களவுமாகப் பிடித்து போலீசில் ஒப்படைக்க வேண்டும் என முடிவு செய்துள்ளார்.
அதன்படி பெண் ஒருவரின் பெயரில் போலி ஐடியை உருவாக்கிய ரகு, பயாஸுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டு மற்ற பெண்களைப் போலவே அவனுடன் சேட்டிங் செய்யத் துவங்கியுள்ளார்.
சனிக்கிழமை பயாஸை நேரில் பார்க்க வேண்டும் என குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார் ரகு. நேரில் பார்த்தால் குட்டு வெளிப்பட்டு விடும் என பயாஸ் பயந்தாலும், அந்தப் பெண்ணை தனிமையில் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் இருந்துள்ளது.
அதனால் முன்கூட்டியே பெண் ஐடியில் இருந்த ரகுவிடம், போட்டோவில் உள்ளதற்கும் நேரில் பார்ப்பதற்கும் தாம் கொஞ்சம் வித்தியாசமாகத் தெரிவேன் எனக் கூறியுள்ளான் பயாஸ். அதற்கு ரகு, “நீங்கள் எப்படி இருந்தாலும் பரவாயில்லை, உங்களை சந்தித்தே தீர வேண்டும்” என கொக்கி போட்டுள்ளார்.
சந்தோஷத்தில் திளைத்த பயாஸ், எங்கே வரவேண்டும் என பெண் ஐடியில் இருந்த ரகுவிடம் கேட்டுள்ளான். ஆரணி கோட்டை மைதானத்திற்கு வருமாறு அவனை அழைத்த ரகு, அங்கு தனது நண்பர்களுடன் காத்திருந்துள்ளார்.
பெண்ணைப் பார்க்க போகிறோம் என ஆவலோடு வந்த பயாஸை சுற்றி வளைத்த ரகுவும் அவருடைய நண்பர்களும். அவனை காவல் நிலையம் அழைத்துச் சென்று ஒப்படைத்துள்ளனர்.
Comments