நகைக்கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டிவிட்டு 5 கிலோ நகை கொள்ளை ; மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே நகைக்கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டிவிட்டு 5 கிலோ நகையைக் கொள்ளையடித்துச் சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
வீரவநல்லூரில் மைதீன்பிச்சை என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். திங்கட்கிழமை இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு, நகைப் பையுடன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
இவரது வீடு அமைந்திருக்கும் புது மனைத் தெருவை நெருங்கியபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் மைதீன்பிச்சையை அரிவாளால் வெட்டிவிட்டு நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
படுகாயங்களுடன் மைதீன்பிச்சை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், கொள்ளை கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Comments