பாகிஸ்தானுக்கு புதிய பிரதமர்.. 70 வயதில் நாடாள வருகிறார் ஷெபாஸ் செரீப்..!
பாகிஸ்தானின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரரான ஷெபாஸ் ஷெரீப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் அவர் அந்நாட்டின் 23ஆவது பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லான தீர்மானம் மீது சனிக்கிழமை நள்ளிரவு நடத்தப்பட்ட வாக்கெடுப்பு வெற்றி பெற்ற நிலையில், அவரது தலைமையிலான அரசு கவிழ்ந்தது.
இதனைத் தொடந்து, பிரதமர் பதவிக்கு எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் சகோதரரும், முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சியின் தலைவருமான ஷெபாஸ் ஷெரீப் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். அதேபோல், இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் சார்பில் அதன் துணைத்தலைவர் ஷா மக்மூத் குரேஷியும் வேட்பு மனுதாக்கல் செய்தார்.
இந்நிலையில், புதிய பிரதமரை தேர்வு செய்வதற்காக இன்று பிற்பகல் வேளையில் பாகிஸ்தான் நாடாளுமன்றம் கூடியது. அப்போது, அவைக்கு வந்த இம்ரான் கட்சி எம்பிக்கள் ஷெபாஷ் ஷெரிப்பிற்கு எதிராகவும், புதிய பிரதமர் தேர்வு செய்வதற்கு எதிராகவும் முழக்கத்தை எழுப்பியதை தொடர்ந்து,
அவர்கள் நாடாளுமன்றத்தை புறக்கணித்தனர்.
இதனை அடுத்து, பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் ஒருமனதாக தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் அவர் அந்நாட்டின் 23ஆவது பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.
முன்னதாக, ஷெபாஸ் ஷெரீப் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்த இம்ரான் கான், நாடாளுமன்றத்தில் திருடர்களுடன் அமர முடியாது என கருத்து தெரிவித்தார். மேலும், எம்.பி பதவியை ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ய தெரிப் இ இன்சாப் கட்சியினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Comments