கொரோனா பல்வேறு வடிவங்களில் மாறி மீண்டும் பரவுகிறது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறைத்துக் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி
கொரோனா பெருந்தொற்று நம்மை விட்டு நீங்கவில்லை என தெரிவித்த பிரதமர் மோடி, அவை பல்வேறு வடிவங்களில் மாறி மீண்டும் பரவுவதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்...
குஜராத் மாநிலத்தின் ஜூனாகத்தில் உள்ள உமியா மாதா திருக்கோவிலின் 14-வது நிறுவன தின விழாவில் காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், கொரோனா பெருந்தொற்று ஒரு நெருக்கடி என்றும் அந்த நெருக்கடியான சூழல் இன்னும் முடிவடைந்துவிடவில்லை என்றும் கூறினார்.
மேலும், தற்போதய நிலையில் கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளது போல் தோன்றினாலும் அவை எப்போது மீண்டும் பரவும் என தெரியாது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு துரிதமாக செயல்பட்டு சுமார் 185 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டதாகவும், அவை மொத்த உலகையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
கொரோனா தொற்று பரவல் முடிவுக்கு வராத நிலையில், மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்பட்டு நோய்த் தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்றும் பிரதமர் அறிவுறுத்தினார்.
ரசாயன உரங்களின் பாதிப்பில் இருந்து பூமித் தாயை காப்பாற்ற, விவசாயிகள் அனைவரும் இயற்கை விவசாயத்திற்கு திரும்ப வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார். மேலும், குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படாமல் ஆரோக்கியமாக இருந்தால்தான், சமூகமும் நாடும் வலிமை பெறும் என்றும் மோடி கூறினார்.
Comments