இம்ரான்கான் ஆட்சி கவிழ்ந்தது.! பாக். புதிய பிரதமர் நாளை தேர்வு.!
பாகிஸ்தானின் புதிய பிரதமரைத் தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நாளை திங்கட்கிழமை நடைபெற உள்ளது. முஸ்லிம் லீக் நவாஸ் கட்சித் தலைவரான ஷெபாஸ் செரீப் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது நள்ளிரவில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் தீர்மானத்துக்கு ஆதரவாக 174 வாக்குகள் பதிவாகின. முன்னதாகச் சபாநாயகர், துணை சபாநாயகர் ஆகியோர் பதவி விலகினர்.
இதையடுத்து இம்ரான் கானின் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்புச் செய்தனர். நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றிபெற்றதால் இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது.
இந்நிலையில் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க நாடாளுமன்றத்தில் திங்களன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் தலைவருமான ஷெபாஸ் செரீப் பிரதமர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது. இவர் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்பின் தம்பி ஆவார்.
பாகிஸ்தான் நாடாளுமன்ற வரலாற்றிலேயே நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் ஆட்சியை இழந்த முதல் பிரதமர் இம்ரான் கான் என்பது குறிப்பிடத் தக்கது.
Comments