தட்டி கேட்க எவருமில்லை பனை மரங்களை அழிக்கும் மணல் கொள்ளையர்கள்..! தேரியை கபளீகரம் செய்வதாக குற்றச்சாட்டு
திருச்செந்தூர் அருகே பல ஏக்கர் பரப்பிலுள்ள செம்மண் தேரியில் அரசு அனுமதியின்றி ஏராளமான பனைமரங்களை அழித்து மணல் கொள்ளை நடைபெற்று வருவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் செம்மண் தேரி மணல் குன்றுகள் அமைந்துள்ளன. தமிழகத்தில் எங்கும் அமைந்திடாத இந்த தேரி மணல் பகுதிகளை பாதுகாத்திட அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த நிலையில் திருச்செந்தூர் அருகே பரமன்குறிச்சியில் அமைந்துள்ள முத்தையா தேரி பகுதியில் கடந்த சில நாட்களாக மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது.
ஹாலோ பிளாக் கற்கள் தயாரிப்பதாகக் கூறி அந்த இடத்தை சுற்றி அடைத்து வைத்துள்ள பரமன்குறிச்சி கஸ்பாவைச் சேர்ந்த சரவணன் என்பவர், அது தனக்கு சொந்தமான இடம் என்று கூறி அரசு அனுமதி இன்றி, சுமார் 30 அடிக்கு ஆழத்துக்கு பள்ளம் தோண்டி நாளொன்றுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் மணலை அள்ளி அனுப்பி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
தினமும் பொக்லைன் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் ஏற்றி அனுப்பப்படும் மணலானது, சுமார் 15 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இங்கு நிலத்தடி நீருக்கு ஆதாரமாக விளங்கக் கூடிய ஏராளமான பனை மரங்களும் வேறொடு சாய்க்கப்படுவதால் , பரமன்குறிச்சி சுற்று வட்டார பகுதிகளான கீழநாலுமூலைக்கிணறு, குன்றுமலை சாஸ்தா கோவில் தேரி, முத்தையா தேரி உள்ளிட்ட சுமார் 35 கிராமங்களில் சுற்றுச் சூழல் பாதிக்கப் படுவதோடு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலையும் உருவாகி இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
வீடுகட்டவோ, செங்கல் செய்யவோ பயன்படுத்த இயலாத இந்த தேரி மண்ணை லாரி லாரியாக அள்ளிச்சென்று இதில் உள்ள தோரியம் உள்ளிட்ட பல்வேறு கனிமங்களை பிரித்தெடுக்கிறார்களோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் பனை மரங்களை வெட்டுவதற்கு தடை பிறப்பித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. மாவட்ட ஆட்சித்தலைவரின் அனுமதி இன்றி இந்தப் பகுதியில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக ஆதங்கம் தெரிவிக்கும் சமூக ஆர்வலர்கள், கையூட்டு பெற்றுக் கொள்ளும் சில அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இந்த தொடர் மணல் கொள்ளை நடைபெற்று வருவதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்த மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தி தேரியில் உள்ள பனை மரங்களை பாதுகாத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்தப்பகுதி பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Comments