கரப்பான் பூச்சி பிரியாணி.. புகாரி ஓட்டலுக்கு சீல்.. 3 நாட்களுக்கு பூட்டு அதிகாரிகள் அதிரடி..!
சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள புகாரி ஓட்டலில் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்த தம்பதிக்கு கரப்பான் பூச்சியுடன் பிரியாணி கொடுத்ததால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பராமரிப்பில்லாமல் கரப்பான் பூச்சிகள் நிறைந்து காணப்பட்ட சமையலறையால் புகாரி ஓட்டலுக்கு சீல் வைத்து பூட்டு போடப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு
சென்னை ஒ.எம்.ஆர் சாலை ஒக்கியம் துரைப்பாக்கத்தில் உள்ள புகாரி உணவகத்திற்கு தம்பதி உணவருந்த சென்றனர். சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்துள்ளனர். அவர்கள் தட்டில் கொட்டி சாப்பிட்ட பிரியாணியில் கரப்பான் பூச்சி ஒன்று கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்களை பேசி சமாளிப்பதற்கு ஓட்டல் நிர்வாகத்தினர் முயன்ற நிலையில் அதற்கு சம்பதிக்காத தம்பதியர், கரப்பான் பிரியாணி குறித்து உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார் அளித்தனர்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உணவுப்பொருள் பாதுகாப்பு அதிகாரி சுகுமார் காவல்துறையினர் உதவியுடன் புகாரி ஓட்டலில் அதிரடியாக சோதனை மேற்கொண்டார். சமையலறை பராமரிப்பில்லாமல் கரப்பான்பூச்சிகளின் வாழ்விடமாக காணப்பட்டது.
சமையலறையிலும் அதனை சுற்றியும் அழுக்கு படிந்து, குப்பை கூளங்களாக காணப்பட்டது. உணவு பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ள விதிமுறைகள் எதையும் பின்பற்றாமல், அசுத்தமான நிலையில் உணவு சமைக்கப்படுவதையும், சமைக்கும் பகுதியில் கரப்பான் பூச்சிகள் ஏராளமாக சுற்றித் திரிந்ததையும் பார்த்து ஓட்டல் உரிமையாளரை சத்தம் போட்டனர்.
ஓட்டல் சமையலறையிம் அலங்கோலத்தை சீர் செய்யவும், கரப்பான் பூச்சி பிரியாணி குறித்த புகாரின் அடிப்படையிலும், புகாரி ஓட்டலை 3 நாள் இழுத்து பூட்ட உத்தரவிட்டனர். ஓட்டலில் அவர்கள் பாதுகாப்பின்றி சமைத்து வைத்திருந்த பிரியாணியை மூட்டையாக கட்டி எடுத்துச்சென்று குப்பையில் கொட்டினர்.
மேலும் உணவகத்தின் மீதான புகாரை மூன்று நாட்களுக்குள் சரி செய்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் வந்து சரிபார்த்த பின்னரே உணவகத்தை திறக்க வேண்டும் என உத்தரவிட்டதோடு 5000 ரூபாய் அபாரதமும் விதிக்கப்பட்டது.
அதே நேரத்தில் ஒரு பிரியாணிக்கு 300 ரூபாய்க்கு மேல் வசூலிக்கும் பிரபல ஓட்டல்கள் குடும்பத்துடன் வந்து சாப்பிட வரும் வாடிக்கையாளர்கள் அடுத்த முறையும் வர வேண்டும் என்று உடல் நலனுக்கு கேடு விளைவிக்காத வகையில் தரமான உணவுகளை பரிமாற வேண்டும் என்பதே அனைவரின் ஆதங்கமாக உள்ளது.
Comments