இம்ரான்கான் அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தை துணை சபாநாயகர் ரத்து செய்தது சட்டவிரோதம் - அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு

0 1561

பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட  நம்பிக்கை இல்லா தீர்மானத்தை துணை சபாநாயகர் ரத்து செய்தது சட்டவிரோதம் என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நாளை நாடாளுமன்றத்தை கூட்டி மீண்டும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரிப்பு, விலைவாசி உயர்வு ஆகியவற்றுக்கு பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசுதான் காரணம் எனக் குற்றம்சாட்டி அவர் மீது நாடாளுமன்றத்தில் கடந்த 3 ஆம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டுவந்தன.

பாகிஸ்தானில் உள்ள 342 எம்.பிக்களில் 172 பேரின் ஆதரவை பெற்றால்தான் பதவியில் நீடிக்க முடியும் என்ற நிலையில், எதிர்க்கட்சிகளுக்கு 177 எம்.பிக்கள் ஆதரவு உள்ளதால், இம்ரான் கான் ஆட்சி கவிழும் நிலையில் உள்ளது.

இந்த சூழலில், திடீர் திருப்பமாக நம்பிக்கையில்லா தீர்மானம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனக்கூறி அதனை துணை சபாநாயகர் காசிம் கான் நிராகரித்தார். பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைக்க எடுத்த முடிவு சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டது செல்லாது என்றும், நாடாளுமன்றம் மீண்டும் செயல்பட அனுமதி அளித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நாளை காலை 10 மணிக்கு மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று ஆணையிட்டுள்ள உச்சநீதிமன்றம், பொதுத்தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற உத்தரவும் செல்லாது என தீர்ப்பளித்துள்ளது.

 

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments