ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யா இடைநீக்கம்.!
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யா இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் புச்சா நகரில் நடைபெற்ற படுகொலைகளை அடுத்து ஐநா மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யாவை நீக்க வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் வலியுறுத்தின.
இதை அடுத்து நியூயார்கில் ஐ.நா.சபையின் பொதுச்சபை கூட்டத்தில் அதற்கான தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. ரஷ்யாவை நீக்க கோரும் தீர்மானத்தை ஆதரித்து 93 நாடுகள் வாக்களித்தன.
தீர்மானத்தை எதிர்த்து சீனா, பெலாரஸ், ஈரான், சிரியா உள்ளிட்ட 24 நாடுகள் வாக்களித்தன. இந்தியா, இந்தோனேசியா உள்ளிட்ட 58 நாடுகள் நடுநிலை வகித்தன. தீர்மானத்திற்கு பெரும்பான்மையான நாடுகள் ஆதரவு தெரிவித்ததால் ஐ.நா.மனித உரிமை அமைப்பில் இருந்து ரஷ்யா இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
முன்னதாக பேசிய ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி திருமூர்த்தி, உக்ரைனின் புச்சா நகரில் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டது கவலை அளிப்பதாக தெரிவித்தார்.
அதற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும், இது குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். போரின் தாக்கத்தால் பிராந்தியத்திற்கு அப்பாலும், குறிப்பாக வளந்து வரும் நாடுகளில் உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருளின் விலை அதிகரித்து வருவதாக குற்ப்பிட்டார்.
எனவே இப்பிரச்னையில் தீர்வு காண ஐநா அவைக்கு உள்ளேயும் வெளியிலும் ஒருங்கிணைந்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் திருமூர்த்தி கேட்டுக்கொண்டார்.
Comments