இலங்கையில் வலுக்கும் போராட்டம்.. கொந்தளிப்பில் மக்கள்.!

0 1899

இலங்கையில் மக்களுடன் இணைந்து அரசு ஊழியர்கள், மருத்துவர்களும் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட முன்வந்துள்ளதால் கோத்தபய அரசுக்கான எதிர்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து, கோத்தபய ராஜபக்சேவும், அவரது சகோதரர் மகிந்தா ராஜபக்சேவும் பதவி விலக வேண்டும் கோரி போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளன.

கொழும்பு நகரில் பல்வேறு இடங்களில் திரண்ட மக்கள் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

மக்களோடு இணைந்து இலங்கை மருத்துவர்கள் சங்கமும் போராட்டத்தை தொடங்கி உள்ளது. அரசின் செயல்பாடுகளால் சுகாதார கட்டமைப்பு முற்றிலுமாக தகர்ந்து போகும் நிலை உருவாகி உள்ளதாக மருத்துவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

ராஜபக்சே குடும்பத்தினர் ஆட்சியில் இருந்து விலக வேண்டுமென அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.இதனிடையே அரசாங்கத்திற்கு எதிராக இலங்கை மக்கள் வங்கி ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்கள் இணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொழும்பு இலங்கை மக்கள் வங்கி தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

கோத்தபய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோரின் ராஜினாமாவை பிரதான கோரிக்கையாக முன்வைத்து அனைத்து அரசு ஊழியர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இலங்கை அரசு ஊழியர் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. இதற்கு முன்னோட்டமாக இன்று மதியம் உணவு இடைவேளையின் போது அவர்கள் நாடு தழுவிய மவுன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசுக்கு எதிராக அனைத்து மாவட்ட கல்வி அலுவலங்கள் முன்பு நடைபெற்ற நாடு தழுவிய போராட்டத்தில் ஆசிரியர்கள் 2,47,000 பேரும், கல்வித்துறை ஊழியர்கள் 16,000 பேரும் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனிடையே இன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் பேசிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இலங்கையில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது என்றார். அதனைத் தீர்ப்பதற்கு எல்லோரும் கட்சி பேதமின்றி செயற்படவேண்டியது அவசியம் என்ற அவர், இல்லையேல் ஆயிரம் உயிர்கள் கொல்லப்படும் ஆபத்து உள்ளது என்றும் எச்சரித்தார்.

நாடாளுமன்ற கூட்டத்தில் பேசிய பல்வேறு உறுப்பினர்களும் ராஜபக்ச குடும்பத்தினர் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தினர். ஆனால் அதிபர் பதவியில் இருந்து கோத்தபய விலக மாட்டார் என்று அந்நாட்டு நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments