உக்ரைன் போரின் எதிரொலி.. உலக நாடுகளில் பாதிப்பு
உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதலின் எதிரொலியாகப் பல நாடுகளில் வேளாண்துறை ஏற்றுமதி, தொழில்துறை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் தென்பகுதியில் அசோவ் கடலையொட்டிய மரியுபோல் நகரில் ரஷ்ய ராணுவத்தின் முற்றுகை ஒரு மாதத்துக்கு மேல் நீடிக்கிறது. மின்சாரம், குடிநீர், உணவுப் பொருள் வழங்கல் துண்டிக்கப்பட்டுள்ளதால் மனிதநேய உதவிகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் பேருந்து நிலைய வளாகத்தில் மனிதநேய உதவியாக வழங்கப்படும் உணவுப் பொருட்களைப் பெற ஏராளமானோர் வரிசையில் காத்து நின்றனர்.
ரஷ்யாவின் டொய்லாட்டி நகரில் உள்ள லாடா நிறுவனத்தின் வாகனத் தயாரிப்புத் தொழிற்சாலையில் பல்லாயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
சோவியத் காலத்தில் இருந்ததைவிட இப்போது உற்பத்தி பாதியாகக் குறைந்துவிட்டபோதும் தொழிலாளர்களுக்கு நல்ல ஊதியம் கிடைத்து வந்தது.
இந்நிலையில் மேலை நாடுகளின் பொருளாதாரத் தடை காரணமாக ரஷ்யாவில் இன்றியமையாப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் தொழிலாளர்களும் லாடா நிறுவனமும் கடும் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர்.
தென் அமெரிக்கா நாடான ஈக்குவடார் வாழைக்காய் ஏற்றுமதியில் உலகில் முதலிடத்தில் உள்ளது.
இங்கு விளைவிக்கப்படும் வாழைக்காய்கள் பெருமளவில் ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. உக்ரைன் போரின் விளைவாக ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்ய முடியாத நிலை உள்ளதால் வாழைக்காய்கள் தேக்கமடைந்துள்ளன. இதனால் ஈக்குவடார் வாழை விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
Comments