கோயம்பேடு மார்கெட்டுக்கே பைனான்ஸாம்.. கோடிகளை சுருட்டிய அரசியல் கேடி.!
சென்னை கோயம்பேட்டில் மொத்த வியாபாரிகளுக்கு மீட்டர் வட்டியில் பணம் கொடுப்பதாக கூறி சவுதி அரேபியா தொழில் அதிபரிடம் 12 அரை கோடி ரூபாயை சுருட்டிய கேடி அரசியல் பிரமுகரின் மனைவியை போலீசார் கைது செய்தனர்.
சென்னை சைதாப்பேட்டையில் கார் ஓட்டுனரை வீட்டுக்குள் பூட்டிவைத்து தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட காங்கிரஸ் பிரமுகரும் ரவுடியுமான ஓ.வி.ஆர் ரஞ்சித்தின் மனைவியான சுனிதா என்பவர் தான் கோடிகளை சுருட்டிய புகாரின் கைது செய்யப்பட்டுள்ளவர்
சைதாப்பேட்டையில் தாங்கள் தங்கி இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பிளாட்டை கவர்ச்சிகரமான அலுவலகமாக மாற்றி வைத்திருந்த ஓ.வி.ஆர் ரஞ்சித் , இரு போலியான நிதி நிறுவனங்கள் நடத்திவந்துள்ளார்.
மனைவி சுனிதாவை மேலாண் இயக்குனராக போட்டு இயங்கி வந்த அந்த நிதி நிறுவனத்தில் உள்ளூர் மற்றும் வெளி நாடுகளை சேர்ந்த தொழில் அதிபர்களை தனது அரசியல் தொடர்புகள் மூலம் சந்தித்து முதலீடுகளை ஈர்த்துள்ளார்.
அதன்படி சவுதிஅரேபியாவில் தொழில் செய்து வரும், சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த தொழில் அதிபர் சீனிவாசன் என்பவரிடம், தான் கோயம்பேட்டில் பல கோடிகளை மீட்டர் வட்டிக்கு விட்டு ஒரே நாளில் இரு மடங்காக வசூலிப்பதாகவும், மொத்த காய்கறிவியாபரிகளுக்கு பணத்தை அள்ளிக்கொடுப்பதால் தன்னை நம்பிதான் கோயம்பேடு மார்க்கெட்டே இயங்குவதாகவும் கதை அளந்துள்ளார்.
ஒரு லட்சம் ரூபாய் காலையில் கொடுத்தால் ஜெட் வட்டியின் மூலம் மதியவேளையில் தன்னிடம் 2 லட்சம் ரூபாய் கைக்கு வந்து விடும் என்று கூறி உள்ளார். இதனை நம்பி சீனிவாசன் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை 12 கோடியே 50 லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தையும், 36 சவரன் நகைகளையும் முதலீடு செய்துள்ளார்.
அவர் முதலீடு செய்த பணம் வட்டியாக குட்டிபோடுவதாக கூறிவந்த இந்த மோசடி கும்பல், பணத்தை முதலீடு செய்து ஒரு வருடம் கடந்த நிலையிலும் சீனிவாசனுக்கு எந்த ஒரு பணத்தையும் கொடுக்காமல் டிமிக்கு கொடுத்து இழுத்தடித்து வந்துள்ளனர்.
சீனிவாசன் போன்ற முதலீட்டாளர்களிடம் பெற்ற பணத்தை, ஓ.வி.ஆர் ரஞ்சித் பல பெண்களுடன் ஊர் ஊராக சுற்றவும், உல்லாச வாழ்க்கைக்கும் செலவிட்டுள்ளார். இந்த நிலையில் பணத்தை திருப்பிக்கேட்டு சீனிவாசன் காவல்துறையினர் மூலம் நெருக்கடி கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் தனது கணவரின் அந்தபுர அத்துமீறல்கள் அம்பலமானதால் கணவனுடன் சண்டையிட்டு தலைமறைவாகி உள்ளார் சுனிதா.
இதற்கிடையே தனது காதல் ரகசியத்தை ஓட்டுனர் மனைவியிடம் சொன்னதாக நினைத்து அவரை கொலை வெறியுடன் தாக்கிய வழக்கில் ஓ.வி.ஆர் ரஞ்சித்தை கிண்டி போலீசார் கைது செய்து அழைத்துச்சென்ற நிலையில், 12 கோடியே 50 லட்சம் ரூபாயை மோசடியாக சுருட்டிய புகாரில் சுனிதாவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த மோசடி சம்பவத்தில் ஓ.வி.ஆர் ரஞ்சித்துக்கு முக்கிய தொடர்பு இருப்பதால் அவரை இந்த வழக்கிலும் கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
Comments