6 ஆண்டுகளுக்கு முன் இலவச மின் இணைப்புக்காக விண்ணப்பித்த விவசாயிக்கு, மின்வாரியத்தால் வழங்கப்பட்ட ரசீது போலி எனத் தெரியவந்ததால் அதிர்ச்சி
தஞ்சையில் இலவச மின்சாரத்துக்காக பணம் கட்டிய விவசாயிக்கு மின்வாரியம் சார்பில் ரசீது கொடுக்கப்பட்ட நிலையில், 6 ஆண்டுகள் கழித்து அந்த ரசீது போலி என அதிகாரிகள் கூறுவதால், சம்பந்தப்பட்ட விவசாயி மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்.
வேங்குராயன் குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த பாண்டியராஜன் என்பவர் தனது விவசாய நிலத்துக்கு இலவச மின்சாரம் வேண்டி கடந்த 2016ஆம் ஆண்டு மருங்குளம் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். நுழைவு கட்டணமாக 50 ரூபாயும் பதிவுக்கட்டணமாக 500 ரூபாயும் கொடுத்து ரசீதும் பெற்றுள்ளார்.
6 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தனக்குப் பின் விண்ணப்பித்தவர்களுக்கு மின் இணைப்பு கிடைத்துவிட்டதால், மாவட்ட தலைமை மின் வாரிய அலுவலகத்தை அணுகி ரசீதைக் காண்பித்து விளக்கம் கேட்டுள்ளார். அவரிடமிருந்த ரசீதை வாங்கிப் பார்த்த அதிகாரிகள் அது போலியானது என்றும் மின் இணைப்புக்குப் பணம் கட்டியதாக தங்கள் தரப்பில் பதிவாகவில்லை என்றும் கூறியுள்ளனர்.
அதிர்ச்சியடைந்த பாண்டியராஜன் மாவட்ட ஆட்சியரிடம் இதுகுறித்து புகாரளித்துள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு மருங்குளம் அலுவலகத்தில் பணியாற்றியவர்கள் போலி ரசீதுகளைத் தயார் செய்து விவசாயிகளிடம் பணம் வாங்கி மோசடி செய்துள்ளனரா என விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments