அரசியல் பிரமுகர் காதலை காட்டிக் கொடுத்ததால் கார் ஓட்டுனருக்கு தர்ம அடி.. 8ஆவது மாடியில் இருந்து ஆபத்தான எஸ்கேப்.!
சென்னை சைதாப்பேட்டையில் கார் ஓட்டுனரை அடித்து உதைத்து அடுக்குமாடி குடியிருப்பின் 8ஆவது மாடியில் உள்ள வீட்டில் அடைத்து வைத்து விட்டு அந்தமானுக்கு தப்பிய பிரபல ரவுடியை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள காசாகிராண்ட் அடுக்குமாடி குடியிருப்பின் 8ஆவது மாடியில் இருந்து கயிற்றின் மூலம் இறங்க முயன்ற மர்ம நபர் ஒருவர் கயிறு அறுந்து கீழே விழுந்து காயங்களுடன் அவதிப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்கு விரைந்த கிண்டி போலீசார் அந்த இளைஞரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அவரிடம் விசாரித்த போது காங்கிரஸ் கட்சியின் அண்மையில் இணைந்துள்ள ஓதியூரை சேர்ந்த ஓ.வி.ஆர் ரஞ்சித் என்பவரது ஓட்டுனர் என்பது தெரியவந்தது. மேலும் எதற்காக கயிற்றில் குதித்தார் என்று விசாரித்த போது ஓ.வி.ஆர். ரஞ்சித்தின் ரகசிய காதல் கலட்டா அம்பலமானது..!
ஆரம்பத்தில் புரட்சி பாரதம் கட்சியில் செங்கல்பட்டு பகுதி நிர்வாகியாக இருந்த ஓ.வி.ஆர். ரஞ்சித், பின்னர் அங்கிருந்து விலகி, அண்மையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. ரஞ்சித் மீது ரியல் எஸ்டேட் என்ற பெயரில் கட்டப் பஞ்சாயத்து செய்வது உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதால் அவரது பெயரை காவல்துறையினர் சரித்திரப் பதிவேடு குற்றவாளி பட்டியலில் வைத்துள்ளனர்.
வழக்கம் போல ரவுடிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு புகழ்ந்து பாடி உசுப்பேற்றும் சில கானா பாடகர்கள் இவரையும் புகழ்ந்து பாட, அதனை யூடியூப்பில் பதிவேற்றி வந்துள்ளார் ஓ.வி.ஆர் ரஞ்சித்
போலீஸ் வழக்குகளுக்கு பயந்து சொந்த ஊரில் இருந்து இடம் பெயர்ந்த ஓ.வி.ஆர் ரஞ்சித் சின்னமலையில் உள்ள காசா கிராண்ட் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் 8-வது மாடியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் ரஞ்சித்-க்கு வேறொரு பெண்ணுடன் தகாத உறவு இருப்பது அவரது மனைவிக்கு தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி ஓ.வி.ஆர் ரஞ்சித்துடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை பிரிந்து சென்றுவிட்டாதாக கூறப்படுகின்றது.
தனது ரகசிய காதல் குறித்து மனைவியிடம் போட்டுக் கொடுத்தது, தனது கார் ஓட்டுநரான தி.நகர் ரஞ்சித்தாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் கடந்த மார்ச் 31 ஆம் தேதி அதிகாலை ஓட்டுநர் ரஞ்சித்தை வெளியில் செல்ல வேண்டும் அவசரமாக வருமாறு வீட்டிற்கு அழைத்துள்ளார்.
அண்ணன் அழைக்கிறார் என்று அவசர அவசரமாக வீட்டிற்குள் சென்ற ஓட்டுநரை கதவுகளை பூட்டி கடுமையாக தாக்கியதாகவும், இதில் வலி தாங்க முடியாமல் அங்கும் இங்கும் ஓடிய ஓட்டுனர் ரஞ்சித், ஒரு அறைக்குள் சென்று உள்பக்கமாக பூட்டிக் கொண்டுள்ளார்.
ஒ.வி.ஆர் ரஞ்சித் கொலை வெறியுடன், கதவுக்கு வெளியே காத்திருந்த நிலையில் அறைக்குள் இருந்த கார் ஓட்டுனரோ, கயிறு ஒன்றை எடுத்து தான் பதுங்கி இருந்த அறையின் பால்கனியில் கட்டி 8ஆவது மாடியில் இருந்து கீழே இறங்கி உள்ளார். 3ஆவது மாடி வரை இறங்கிய நிலையில் அதற்கு கீழ் கயிறு இல்லாததால் அங்கிருந்து கீழே குதித்து தப்பிக்க முயன்றுள்ளார்.
இதில் ஓட்டுநர் ரஞ்சித்துக்கு காலில் முறிவு ஏற்பட்டதால் ஓட இயலாமல் அங்கேயே கிடந்ததாக போலீஸ் விசாரணையில் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஓட்டுனர் மீது கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட ஓ.வி.ஆர் ரஞ்சித் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை தேடி அவரது வீட்டிற்குச் சென்றனர். அங்கு ஓ.வி.ஆர் ரஞ்சித் இல்லை அவர் தலைமறைவானது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து ரஞ்சித்தின் செல்போன் எண்ணை வைத்து கண்காணித்ததில் அவர் அந்தமானுக்குத் தப்பிச் சென்றதும், அங்கு தலைமறைவாக பதுங்கியிருப்பதும் போலீசாருக்குத் தெரியவந்தது.
அதனடிப்படையில் அடையாறு துணை ஆணையரின் தனிப்படை போலீசார் அந்தமானுக்கு விரைந்து சென்று அங்கு குறிப்பிட்ட இடத்தில் பதுங்கியிருந்த ரஞ்சித்தை கைது செய்து அங்குள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி டிரான்சிட் வாரண்ட் பெற்று திங்கட்கிழமை சென்னை அழைத்து வந்துள்ளனர்.
அந்தமானில் சுதந்திரப் பறவையாக சுற்றிவந்த ஒ.வி.ஆர். ரஞ்சித்தை சென்னை அழைத்து வந்த போலீசார், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறை பறவையாக்கி உள்ளனர்.
இந்த நிலையில் ஓவிஆர் ரஞ்சித்தின் மனைவி சுனிதாவையும் நிதி மோசடி வழக்கில் மத்திய குற்றப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். சுனிதா போலி நிதி நிறுவனம் நடத்தி வந்ததும் அதில் முதலீடு செய்தால் பன்மடங்கு லாபம் கிடைக்கும் எனக் கூறி சீனிவாசன் என்பவரிடம் 12 கோடியே 50 லட்ச ரூபாயைப் பெற்று மோசடி செய்ததும் பாதிக்கப்பட்ட சீனிவாசன் அளித்த புகாரின் மூலம் தெரியவந்தது.
இதனையடுத்து சுனிதாவை கைது செய்த போலீசார், இந்த மோசடியில் சீனிவாசனை மிரட்டியதாக ஓ.வி.ஆர் ரஞ்சித் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொலை முயற்சி வழக்கைத் தொடர்ந்து இந்த வழக்கிலும் அவனை கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
Comments