மதுபான பார்ட்டிக்கு அனுமதிக்காததால் கல்லூரி மாணவன் ஆத்திரம் ; காரை எடுத்து வந்து இரும்பு கேட்டில் மோதியதால் பரபரப்பு
சென்னையில் வயது குறைவாக இருந்ததால் மதுபான பார்ட்டிக்கு அனுமதிக்காத நட்சத்திர ஹோட்டல் ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்த கல்லூரி மாணவர், ஆத்திரத்தில் காரை வைத்து இரும்புக் கேட்டில் மோதி உடைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
முகப்பேரைச் சேர்ந்த 19 வயதான கல்லூரி மாணவர் ஆகாஷ், கிண்டி கத்திப்பாரா அருகே நட்சத்திர ஹோட்டலுக்கு மதுபான பார்ட்டிக்கு சென்றிருக்கிறார். ஹோட்டலில் நடக்கும் மது விருந்துக்கு பெரும்பாலும் 21 வயதுக்கு மேற்பட்டவர்களே அனுமதிக்கப்படும் நிலையில், அவருக்கு வயது குறைவாக இருந்ததால் ஊழியர்கள் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர்.
இதனால், ஆத்திரமடைந்த அந்த இளைஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, காரை எடுத்து வந்து பூட்டியிருந்த கேட் மீது வேண்டுமென்றே மோதினார். உடைத்த வேகத்தில் கேட்டின் ஒரு பகுதி காரின் சக்கரத்தில் சிக்கிக் கொண்டதால், கார் சாலையின் நடுவிலேயே நின்றுவிட்டது. பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீசார், காருக்குள் காயமடைந்திருந்த கல்லூரி மாணவரை மீட்டு சிகிச்சைக்கு அனுமதித்ததோடு, பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் காரை அப்புறப்படுத்தினர்.
இதனால், சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாணவர் ஓட்டி வந்த காரில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டியிருந்ததால், அவரது குடும்பத்தினர் யாரும் காவல்துறையில் இருக்கிறார்களா என விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், ஏற்கனவே அந்த இளைஞர் மதுபோதையில் இருந்தது தெரியவந்திருக்கும் நிலையில், குடிபோதையில் வாகனத்தை இயக்கியது உள்ளிட்ட பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Comments