கடும் நிதிநெருக்கடியில் இலங்கை.. அவசர நிலையும், ஊரடங்கும்..

0 1939
இலங்கையில் முடக்கப்பட்டிருந்த சமூக வலைதள சேவைகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இருப்பினும், அவசர நிலை பிரகடனபடுத்தப்பட்டு, ஊரடங்கு அமலில் இருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

இலங்கையில் முடக்கப்பட்டிருந்த சமூக வலைதள சேவைகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இருப்பினும், அவசர நிலை பிரகடனபடுத்தப்பட்டு, ஊரடங்கு அமலில் இருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. 

இலங்கையில் பொருளாதார நெருக்கடி, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, பணவீக்கம், எரிபொருள் விலை உயர்வு, பல மணி நேர மின்வெட்டு ஆகியவற்றை கண்டித்தும், அரசுக்கும் எதிராகவும் அந்நாட்டு மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.

இந்த நிலையில், போராட்டத்தை தவிர்க்கும் வகையில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டு, 36 மணி நேர ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை மாலை 6 மணிக்கு துவங்கிய ஊரடங்கு உத்தரவால், தமிழர்கள் அதிகம் வாழும் யாழ்பாணம் உள்ளிட்ட நகரங்கள் வெறிச்சோடின.

கடைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் ஓடாததால் ஆள் நடமாட்டமற்ற காணப்படுகிறது.. முக்கிய சாலைகள், வீதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், பால், மருந்தகம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் தடையின்றி இயங்குகின்றன.

ராணுவ வாகனங்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. இருப்பினும், கொழும்பு உள்ளிட்ட சில இடங்களில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். பல இடங்களில் பொதுமக்கள் வீடுகளிலேயே கருப்புக்கொடி ஏந்தி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

முன்னதாக, சமூக வலைதளம் வாயிலாக மக்கள் போராட்டத்திற்கு ஒருங்கிணையக் கூடும் எனக் கருதி ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப், யூ-டியூப், இன்ஸ்டாகிராம் சேவைகள் முடக்கப்பட்டிருந்த நிலையில், பல மணி நேரங்களுக்கு பிறகு மீண்டும் சமூக வலைதள சேவைகள் செயல்பட துவங்கியுள்ளதாக அந்நாட்டு தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அவசர நிலை அமலில் உள்ள நிலையில், சந்தேகத்திற்குள்ளானவர்களை விசாரணை இன்றி கைது செய்ய ராணுவத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்படுவதோடு, மக்கள் ஒரு இடத்திற்கு இன்னொரு இடத்திற்கு செல்ல ஆவணங்கள் கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தான் அவசர நிலை மற்றும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு கூறியுள்ளது. பொது அமைதியை பேணவும், அரசு மற்றும் தனியார் சொத்துக்களை பாதுகாக்கும் ஒரே நோக்கத்திலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இலங்கை பிரதமர் மகிந்தா ராஜபக்சே ராஜினாமா கடிதத்தை வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. கடுமையான பொருளாதார நெருக்கடியால் இலங்கை சிக்கித் தவித்து வரும் நிலையில், அதிகார பதவிகளில் உள்ள ராஜபக்சே குடும்பத்தினர் ராஜினாமா செய்ய எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம், மகிந்த ராஜபக்சே ராஜினாமா கடிதத்தை வழங்கியதாகவும், அக்கடிதம் ஏற்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments