போராட்டத்தை ஒடுக்க நடவடிக்கை.. சமூக வலைதளங்கள் முடக்கம்.!

0 1876

இலங்கையில் 36 மணி நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அரசுக்கு எதிரான போராட்டத்தையும், வதந்திகளையும் தடுக்க பேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைத்தளங்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, பணவீக்கம் ஆகியவற்றால் சாமானிய மக்களின் வாழ்க்கை தள்ளாடத் தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் எரிபொருள் பற்றாக்குறையால் தினமும் பல மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ள நிலையில், அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் வீதியில் இறங்கி போராடினர்.

இந்த நிலையில், இலங்கையில் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப், யூ-டியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை, சர்வதேச அளவில் இணைய செயல்பாடுகளை கண்காணிக்கும் NetBlocks என்ற நிறுவனம் உறுதி செய்துள்ளது.

ஏற்கெனவே கடந்த 31-ந்தேதி கொழும்பு நகரில் அதிபர் கோத்தபய ராஜபக்சே இல்லத்திற்கு முன் ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடி நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையான இன்று அரசுக்கு எதிராக மிகப்பெரிய நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுக்க, மக்களும், எதிர்க்கட்சிகளும் அழைப்பு விடுத்திருந்த நிலையில், முன்னெச்சரிக்கையாக சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

36 மணி நேர ஊரடங்கு காரணமாக, தமிழர்கள் அதிகம் வாழும் யாழ்பாணம் உள்ளிட்ட நகரங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. கடைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் ஓடாததால் ஆள் நடமாட்டமின்றி காணப்படுகிறது.

முக்கிய சாலைகள், வீதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், பால், மருந்தகம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் தடையின்றி இயங்குகின்றன.

இதனிடையே, அவசர கால உதவியாக இந்தியா அனுப்பிய 40 ஆயிரம் மெட்ரிக் டன் டீசலை இலங்கை சென்றடைந்துள்ளது. இதனால் நாளொன்றுக்கு 13 மணி நேரமாக இருந்த மின்வெட்டு எட்டரை மணி நேரமாக குறைந்துள்ளது.

இதுமட்டுமின்றி இதேபோல் 40 ஆயிரம் டன்கள் அரிசியையும் அனுப்ப இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த மாதம் இலங்கைக்கு 1 பில்லியன் டாலர் அதாவது 7ஆயிரத்து 500கோடி கடனுதவி வழங்க இந்தியா ஒப்புக் கொண்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments