'பீஸ்ட்' மோடில் ரசிகர்கள் 'டேமேஜ் மோடில்' தியேட்டர்ஸ்.! படம் இன்னும் பயங்கரமா இருக்குமோ.?

0 6390
'பீஸ்ட்' மோடில் ரசிகர்கள் 'டேமேஜ் மோடில்' தியேட்டர்ஸ்.! படம் இன்னும் பயங்கரமா இருக்குமோ.?

நெல்லை ராம் திரையரங்கில் பீஸ்ட் படத்தில் டிரைலர் சிறப்பு காட்சியை காண வந்த ரசிகர்களின் உற்சாகத்தால் தியேட்டரின் இருக்கைகள் பலத்த சேதமடைந்தன.

சென்னை ரோகினி மற்றும் நெல்லை ராம் ஆகிய இரு திரையரங்கிலும் எந்த ஒரு முன்னனி நடிகரின் படத்தின் டிரைலர் வெளியானாலும், ரசிகர்களை கவர்வதற்காக அதனை தங்கள் திரையரங்கில் வெளியிடுவது வழக்கம்.

அந்தவகையில் பீஸ்ட் திரைப்பட  டிரைலர் நேற்று மாலை 6 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டது. இரு திரையரங்கிலும் ரசிகர்கள் பெரும் அளவில் திரண்டு இருந்தனர்.

ரோகினியில் திரையரங்கிற்குள் ரசிகர்களை அனுமதிக்காமல் வளாகத்தில் டிஜிட்டல் திரை வைத்து டிரைலர் ஒளிபரப்பப்பட்டது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உற்சாகமாக கண்டுகளித்தனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ஒரே ஒரு முன்பக்க கண்ணாடி கதவு மட்டும் சேதமடைந்தது.

நெல்லையில் உள்ள ராம் திரையரங்க உரிமையாளர் தாராள மனதுக்காரர் என்பதால் ரசிகர்களை கவர்வதற்காக வழக்கம் போல திரையரங்கிற்குள் டிரைலரை பார்க்க ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த டிரைலரை காண்பதற்காக மாலை முதலே விஜய் ரசிகர்கள் தியேட்டர் வளாகத்தில் குழுமி ஆட்டம் பாட்டம் உற்சாகத்துடன் காணப்பட்டனர்.

திரையரங்கில் தங்கள் தளபதியின் ஆக ஷன் அவதாரத்தை கண்டு மெய்சிலிர்த்து துள்ளி குதித்து ஆடியதால் அவர்கள் அமர்ந்து இருந்த இருக்கைகள் பலத்த சேதமடைந்தன.

உடனடியாக திரையரங்கில் உள்ள ஊழியர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் பீஸ்ட் மோடில் இருந்த ரசிகர்களை வெளியேற்ற முயன்ற போது அவர்கள் போனஸ் தாக்குதலாக கண்ணாடி கதவையும் உடைத்து எரிந்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் திரையரங்கிற்குள் பரபரப்பான நிலை காணப்பட்டது. ரசிகர்களின் ஆதரவு தங்களது திரையரங்கிற்கு தேவைப்படும் என்பதால் காவல்துறையில் தற்போது வரை திரையரங்கம் தரப்பில் புகார் எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில் ரசிகர்கள் தங்களது தரமான சம்பவம் என இந்த காட்சிகளை வீடியோ எடுத்து டுவிட்டர், வாட்ஸ் அப்பில் பகிர்ந்து வருகின்றனர்.

விஜய் படம் என்றால் கணக்கு வழக்கில்லாமல் ரசிகர்களிடம் வசூலை அள்ளிவிடலாம் என்ற கணக்கில் டிரைலரையே திரைப்படம் போல கோலாகலமாக வெளியிட்ட ராம் திரையரங்கம் இறுதியில் கந்தல் கோலமானது தான் சோகத்திலும் சோகம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments