பேருந்தில் பெண்கள் மீது கைவைத்தால் இனி இந்த குத்து தான்.. காமுகனை பதம் பார்த்த வீரப்பெண்.!

0 5498

அரசு பேருந்தில் பின் இருக்கையில் அமர்ந்து உறங்குவது போல் நடித்து பாலியல் சேட்டையில் ஈடுபட்ட நபரை ஊக்கால் குத்தி பிடித்த பெண் வழக்கறிஞர், வீடியோ ஆதாரத்துடன் போலீசில் ஒப்படைத்தார்.

வேலூர் மாவட்டம் காவிரிபாக்கத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது தாயாருடன் சென்னையிலிருந்து வேலூர் செல்வதற்காக அரசு பேருந்தில் பயணித்துள்ளார்.

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து புறப்பட தொடங்கியதிலிருந்து பெண் வழக்கறிஞர் அமர்ந்திருந்த பின் இருக்கையில் இருந்த ஆண் நபர் ஒருவர் அவரிடம் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். ஆரம்பத்தில் தெரியாமல் பின் இருக்கையில் இருந்து கை,கால்பட்டிருக்கலாம் என வழக்கறிஞர் நினைக்க, சிறிது நேரத்தில் அந்த நபர் வேண்டுமென்றே கையால் சீண்டலில் ஈடுபடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வெகுண்டெழுந்த வழக்கறிஞர் பர்ஸில் வைத்திருந்த சேஃப்டி பின்னை எடுத்து முன் இருக்கைக்கு நீண்ட கையை குத்தியதோடு அதனை வீடியோவாக படம் பிடித்தார் அத்துமீறலில் ஈடுபட்ட அந்த ஆசாமியை களவுமாக பிடித்தார்.

கோயம்பேட்டில் இருந்து வேலூர் செல்லும் அரசு பேருந்தில் நடத்துனர் யாருமில்லாததால் காவல்துறைக்கு தகவல் தெரிவித்த அந்த பெண் வழக்கறிஞர் , மதுரவாயல் காவல் நிலையத்தில் அந்த பேருந்தை நிறுத்தச் சொல்லி அந்த நபரை போலீசாரிடம் ஒப்படைத்தார்.

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அந்த நபர் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 40 வயதான ராகவன் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவன் மீது பெண்ணை மானபங்கம் படுத்துதல், ஆபாச சீண்டலில் ஈடுபடுவது, பெண் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த மதுரவாயல் போலீசார் அவனை கைது செய்தனர்.

முன்னதாக இது குறித்து தகவலறிந்ததும் கோயம்பேடு உதவி ஆணையர் ரமேஷ்பாபு ஆய்வாளர் சிவானந்தம் உள்ளிட்ட அதிகாரிகள் நேரடியாக வந்து உடனடி விசாரணை நடத்தி 20 நிமிடத்திற்குள் ராகவன் மீது வழக்குப்பதிவு அவனை கைது செய்தது குறிப்பிடதக்கது

பொது போக்குவரத்தில் பயணிக்கும் பல பெண்கள் இது போன்ற நபர்களால் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகும் சம்பவங்கள் காலம் காலமாக நடந்து வந்தாலும் இந்த சம்பவத்தில் கையில் வைத்திருந்த ஒரு ஊக்கை ஆயுதமாக பயன்படுத்தி தைரியமாக செயல்பட்டு பிடித்துக் கொடுத்த இந்த வீரப்பெண்ணைப் போன்று தைரியத்துடன் மற்றவர்களும் செயல்பட வேண்டும் என காவல்துறை அதிகாரிகள் சுட்டிக் காட்டி பாராட்டு தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments