ஜவ்வாது மலையில் சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் 11 பெண்கள் பலி - உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு
திருப்பத்தூர் அருகே ஜவ்வாது மலையில் சரக்கு வாகனம் கவிழ்ந்து சுமார் நூறு அடி பள்ளத்தில் விழுந்த விபத்தில் 11 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
புதூர்நாடு அடுத்த புலியூர் கிராமத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் உகாதி பண்டிகையை முன்னிட்டு சேம்பரை பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு மகிந்திராவின் பொலேரோ பிக்-அப் ரக சரக்கு வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தனர்.
அதில், அளவுக்கதிமான ஆட்கள் பயணித்ததாக கூறப்படும் நிலையில், ஜவ்வாது மலையில் வாகனம் ஏறியபோது கட்டுப்பாட்டை இழந்து பின்னோக்கி வந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த சிறுமிகள், பெண்கள் உள்ளிட்டோர் உயிரிழந்த நிலையில், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா இரண்டு லட்ச ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Comments