நீர்நிலையை ஆக்கிரமித்து பயிர் செய்திருந்த நெற்பயிர்களை அதிகாரிகள் அழித்ததால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிரைக் கட்டியணைத்து அழுத பெண் விவசாயி.!
இராணிப்பேட்டை மாவட்டம் ஆர்க்காடு அருகே நீர்நிலையை ஆக்கிரமித்து பயிர் செய்திருந்த நெற்பயிர்களை அதிகாரிகள் அழித்த நிலையில், அறுவடைக்குத் தயாராக இருந்த அந்த நெற்பயிரைக் கட்டியணைத்து பெண் விவசாயி அழுதது காண்போரை கலங்கடித்தது.
பல்லமுள்வாடி கிராமத்தைச் சேர்ந்த பாலு என்பவர், தனது 3 ஏக்கர் நிலத்தை ஒட்டி அமைந்துள்ள நீர்நிலையையும் ஆக்கிரமித்து சுமார் ஒரு ஏக்கரில் ADT 37 ரக குண்டு நெற்பயிரை பயிரிட்டிருந்தார்.
இன்னும் நான்கைந்து நாட்களில் அறுவடை செய்ய காத்திருந்த நெற்பயிர்களை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இயந்திரங்களைக் கொண்டு அதிகாரிகள் அழித்தனர் என்று கூறப்படுகிறது.
பயிரை அழிக்காமல் அரசே அதனை அறுவடை செய்து எடுத்துச் சென்றிருந்தால் கூட பரவாயில்லை, அதனைவிடுத்து பாடுபட்டு வளர்த்த பயிர்களை அழித்து விட்டார்களே என பாலுவின் மனைவி நெற்பயிரை கட்டிக் கொண்டு கண்ணீர் விட்டுக் கதறினார்.
அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டபோது, 6 மாதங்களுக்கு முன்பே ஆக்கிரமிப்பு குறித்து பாலுவுக்கு அறிவிப்பு கொடுத்ததாகவும் அதனையும் மீறி அவர் பயிர் செய்துள்ளார் என்றும் தெரிவித்தனர்.
Comments