ரஷ்யாவின் பெல்கோரோட் நகரில் உள்ள எரிபொருள் கிடங்கின் மீது உக்ரைன் தாக்குதல்.!

0 2662

உக்ரைனுக்கு சொந்தமான 2 ராணுவ ஹெலிக்காப்டர்கள் ரஷ்ய எல்லைக்குள் நுழைந்து பெல்கோரோட் நகரில் உள்ள எரிபொருள் கிடங்கின் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளன.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததில் இருந்து தற்போது தான் முதல் முறையாக ரஷ்ய பிராந்தியத்திற்குள் நுழைந்து உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது.

எல்லையை தாண்டி வந்து குறைந்த அளவிலான தூரத்தில் இருந்தபடி உக்ரைன் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக பிராந்திய ஆளுநர் வியாசஸ்லாவ் கிளாட்கோவ் தெரிவித்துள்ளார். இதில் 2 தொழிலாளர்கள் காயம் அடைந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

தாக்குதலை தொடர்ந்து சுற்றுப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். ரோஸ் நெஃப்ட் நிறுவனத்திற்கு சொந்தமான எரிபொருள் கிடங்கு மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், எரிபொருள் கிடங்கு தீப்பிடித்து எரிந்ததில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளது.

ஆனால் கிடங்கு தீப்பிடித்து எரிந்ததற்கான காரணம் எதையும் தெரிவிக்கவில்லை. கடந்த புதன்கிழமையன்று, பெல்கோரோட் அருகே வெடி மருந்து கிடங்கு தீப்பிடித்து எரிந்ததில் தொடர்ச்சியாக வெடிப்புகள் ஏற்பட்டன. ஆனால் அந்த கிடங்கு தீப்பிடித்ததற்கான காரணங்கள் எதுவும் அப்போது வெளியிடப்படவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments