கழற்றிவிட்ட காதலி - சபதமெடுத்த காதலன்.. "ஜோக்கர் ஜோடி" திருடர்களின் பின்னணி.!

0 3222

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சுற்றுவட்டாரத்தில் ஜோக்கர் முகமூடி, குடை சகிதம் சென்று 3 மாதங்களில் 10க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட “ஜோக்கர் ஜோடி” திருடர்களில் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

வசதி இல்லாதவன் என்பதால் கழற்றிவிட்ட காதலி முன் கோடீஸ்வரனாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதற்காக திருடர்களாக மாறியது தெரியவந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குளச்சல், கருங்கல், நித்திரவிளை, வெள்ளிச்சந்தை, கொல்லங்கோடு பகுதிகளில் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களில் ஏ.டிஎம். கொள்ளை, விலையுயர்ந்த செல்போண்கள் திருட்டு, நகைக் கொள்ளை என 10க்கும் மேற்பட்ட சம்பவங்கள் அரங்கேறின.

திருட்டு சம்பவங்கள் அரங்கேறிய பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தபோது, கருப்புக் குடைகளை பிடித்தவாறு ஜோக்கர் முகமூடிகளுடன் 2 பேர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அதன் மூலம் ஒரே ஜோடிதான் அத்தனை சம்பவங்களிலும் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்த “ஜோக்கர் ஜோடியை”ப் பிடிக்க குளச்சல் டி.எஸ்.பி தங்கராமன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. திருட்டில் ஈடுபடப் போகும்போது சாலையிலுள்ள சிசிடிவி கேமரக்களைப் பார்த்துவிட்டால் “16 வயதினிலே” திரைப்படத்தில் வரும் சப்பாணி கதாப்பாத்திரத்தைப் போல கால்களைத் தாங்கித் தாங்கி நடந்து சென்று தங்களது புத்திசாலித்தனத்தை காண்பிக்க முயன்றுள்ளனர்.

3 மாதங்களுக்கும் மேலாக தனிப்படை போலீசாரிடம் சிக்காமல் போக்கு காட்டி வந்தது இந்த ஜோக்கர் ஜோடி. இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு கொல்லங்கோடு பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், அவ்வழியாக யமஹா எஃப் இசட் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த இளைஞன் ஒருவனை மடக்கி விசாரித்தனர்.

அவனது பேச்சு முன்னுக்குப் பின் முரணாக இருந்ததால் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது அவன் வள்ளவிளை பகுதியைச் சேர்ந்த ஷலால் கஸ்பாஸ் என்பதும் போலீசார் தேடி வந்த ஜோக்கர் ஜோடி திருடர்களில் ஒருவன் என்பதும் தெரியவந்தது.

அவனோடு சேர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவன் தூத்தூர் பகுதியை சேர்ந்த ஜிம்சன் என்பதும் தெரியவந்தது. ஏன் திருட்டில் ஈடுபட்டோம் என்பதற்கு ஷலால் கஸ்பாஸ் சொன்ன காரணம் தான் சுவாரஸ்யம்.

ஷலால் கஸ்பாஸும் ஜிம்சனும் நெருங்கிய நண்பர்கள் என்று கூறப்படும் நிலையில், தன் நண்பன் ஜிம்சனுக்காக எதையும் செய்யத் துணிந்தவனாக இருந்திருக்கிறான் ஷலால் கஸ்பாஸ். ஜிம்சன் அழிக்கால் என்ற பகுதியை சேர்ந்த உறவுக்காற பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளான்.

தொடக்கத்தில் அவனது காதலை ஏற்றுக்கொண்ட அந்தப் பெண், ஜிம்சன் வசதி குறைந்தவன் என்பதைத் தெரிந்துகொண்டு அவனை விட்டு விலகி, தனது உறவுக்கார இளைஞனை காதலிக்கத் தொடங்கினார் என்று கூறப்படுகிறது.

இதை அறிந்து ஆத்திரமடைந்த ஷலால் கஸ்பாஸ் நண்பர் ஜிம்சனுடன் சேர்ந்து அந்த உறவுக்காற இளைஞனின் இருசக்கர வாகனத்தை இரவோடு இரவாக தீ வைத்து எரித்துள்ளான்.

தொடர்ந்து வசதி குறைந்தவனாக இருப்பதால் காதலை நிராகரித்த காதலி முன்பு கார், பங்களா என வசதியாக வாழ்ந்து காட்ட வேண்டும் என முடிவு செய்து, அதுவும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் பணக்காரர்கள் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் நண்பர்கள் இருவரும் கொள்ளைக்காரர்களாக மாறியுள்ளனர்.

இருவரும் தனித்தனி பைக்குகளில் ஒரே இடத்திற்கு சென்று கொள்ளையை அரங்கேற்றுவதாகவும் கொள்ளையடித்த பொருட்களை கொல்லங்கோடு பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் பதுக்கி வைத்து விட்டு கேரளாவில் பதுங்கி விடுவதாகவும் ஷலால் கஸ்பாஸ் தெரிவித்துள்ளான்.

போலீசாரிடம் சிக்கியபோது கூட ஒரு கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றத்தான் சென்று கொண்டிருந்ததாகவும் அவன் கூறியுள்ளான். ஷலால் கஸ்பாஸை கைது செய்த போலீசார், அவனிடமிருந்து மூன்று லட்சத்தி ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போண்கள், 22-சவரன் தங்கை நகைகள் மற்றும் விலையுயர்ந்த 2-பைக்குகளையும் பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள கூட்டாளி ஜிம்சனையும் போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments