வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு நிச்சயம் கிடைக்கும் - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்
வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு நிச்சயம் கிடைக்கும் எனப் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தொண்டர்களுக்கு அவர் எழுதிய மடலில், வன்னியருக்கான பத்தரை விழுக்காடு இட ஒதுக்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கவில்லை என்றாலும், வருத்தப்பட வேண்டிய தீர்ப்பு இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு, ஒற்றைச் சாதிக்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்கத் தடையில்லை என்பன உள்ளிட்ட உரிமைகளை இந்த வழக்கில் வென்றெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வருங்காலத்தில் சமூகநீதியை வென்றெடுக்க இந்தத் தீர்ப்பில் உள்ள அம்சங்கள் பெருமளவில் உதவும் எனக் குறிப்பிட்டுள்ளார். போதுமான புள்ளிவிவரங்கள் இருந்தால் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் இல்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கில் தமிழக அரசும், மூத்த வழக்கறிஞர்களை அமர்த்தி வாதிட்டதையும் சுட்டிக் காட்டியுள்ளார். சென்னையில் நாளை பாமக அவசரச் செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என்றும், அதில் எடுக்கும் முடிவின்படி வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை வென்றெடுக்க அடுத்த கட்டப் போராட்டம் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
Comments