ரூ.39 லட்சம் லஞ்சப்பணம் இவருக்கு கொடுக்கத்தான் சென்னைக்கு வந்ததாம்..!

0 16293
ரூ.39 லட்சம் லஞ்சப்பணம் இவருக்கு கொடுக்கத்தான் சென்னைக்கு வந்ததாம்..!

விழுப்புரத்தில் கணக்கில் வராத 39 லட்சம் ரூபாய் பணத்துடன் சிக்கிய ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் மீது நடத்தப்பட்ட விசாரணையில் தன்னை பணியிடை நீக்கம் செய்த உயர் அதிகாரிகளை சமாதானப்படுத்த கட்டுக்கட்டாக பணத்தை எடுத்துச்சென்றதாக அவர் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலராக பணியாற்றியவர் சரவணக்குமார். இவர் தனது காரில் கணக்கில் வராத 39 லட்சம் ரூபாய் பணத்துடன் சென்னைக்கு செல்வதாக கிடைத்த தகவலின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை விழுப்புரத்தில் மடக்கிப்பிடித்தனர்.

அவரை விழுப்புரம் ஆதிரதிராவிடர் நலத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று விசாரித்தனர். அவரது காரில் இருந்து கைப்பற்றைப்பட்ட பையில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்தது. மொத்தம் 38 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் இருந்தது. அந்த பணத்துக்கு உரிய கணக்கு காட்ட இயலாமல் மாமனார் வீட்டுக்கு விருந்துக்கு வந்த புது மாப்பிள்ளை போல தலையை குனிந்தபடி அமர்ந்து இருந்தார் சரவணக்குமார்.

பணம் எப்படி வந்தது என்ற கேள்விக்கு பதில் சொல்லாமல் மவுனம் காத்த சரவணகுமாரை விடாமல் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். கடந்த ஆட்சியில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள விடுதிகளுக்கு சமையலர், விடுதிக்காப்பாளர், உதவியாளர் என 12 காலி பணியிடங்களுக்கு ஆட்களை நியமித்ததில் லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கி குவித்துள்ளார் சரவணக்குமார். ஆட்சி மாறியதும் இது தொடர்பான புகாரின் பேரில் விசாரணை நடத்திய உயர் அதிகாரிகள் சரவணக்குமாரை கடந்த 25 ந்தேதி பணியிடை நீக்கம் செய்ததாக கூறப்படுகின்றது.

இதையடுத்து தனது பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய சென்னை ஆதிதிராவிடர் நல ஆணையர் அலுவலகத்தில் என்ஜினீயரிங் பிரிவில் பணியாற்றும் கலைமோகன் என்பவரிடம் சரவணக்குமார் பேசியதாக கூறப்படுகின்றது. அவரோ, ஒரு பணியிடத்துக்கு 3 லட்சம் வீதம் மொத்தம் 12 பணியிடங்களுக்கு 36 லட்சம் ரூபாய் உயர் அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டும் எனவும் இந்த காரியத்தை முடித்து தரும் தனக்கு 3 லட்சம் ரூபாய் தனியாக வேண்டும் என்றும் கேட்டுள்ளார். அவர் கேட்ட படி பணத்துடன் சென்னைக்கு விரைந்த போது லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கிக் கொண்டது தெரியவந்துள்ளது.

ஒரு கால் ஊனமானாலும் சோர்வடையாமல் மூட்டைத்தூக்கி பிழைக்கும் எத்தனையோ தன்மானமிக்க உழைப்பாளிகள் மத்தியில், சட்டையில் அழுக்குப்படாமல் அரசு சலுகைகளை பெற்று அதிகாரமிக்க பதவியில் இருந்து கொண்டு லட்சம் லட்சமாய் லஞ்சப்பணத்துடன் சிக்கிய சரவணக்குமார் உள்பட 4 பேர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments