இலங்கை அதிபர் இல்லம் முற்றுகை: கொழும்புவில் கண்காணிப்பு தீவிரம்!
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியை கண்டித்து அந்நாட்டு மக்கள் அதிபர் இல்லத்தை முற்றுகையிட்டு நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டு போர்க்களம் போல் காட்சியளித்ததால், காவல்துறை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.
வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவுவதால் பெட்ரோல் நிலையங்களில் பல மணி நேரம் மக்கள் காத்துக்கிடக்கிற நிலை உருவாகியுள்ளது. மேலும் மின் உற்பத்திக்காக அனல்மின் நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்காததால் நாள் ஒன்றுக்கு 13 மணி நேரம் வரை மின்வெட்டு காணப்படுகிறது.
அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலையும் பன்மடங்கு உயர்ந்துள்ளது. இதனை கண்டித்து, தலைநகர் கொழும்புவின் mirihana பகுதியிலுள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே இல்லத்தை முற்றுகையிட்டு ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்ட போராட்டக்காரர்கள், அங்கிருந்த தடுப்பு வேலிகளை தாண்டி ராணுவ வாகனத்திற்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது.
இதனால் முற்றுகை போராட்டம், வன்முறையாக மாறியது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசாரும், சிறப்பு அதிரடி படையினரும் கண்ணீர் புகை குண்டு வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கலைத்தனர். பதிலுக்கு போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட 45 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், 2 காவல்துறை வாகனங்கள், பைக்குகள், தீ வைத்து கொளுத்தப்பட்டன. சம்பவத்தில் ஐந்து போலீசார் காயமடைந்தனர். இந்த போராட்டம் காரணமாக கொழும்புவில் பதற்றமான சூழல் காணப்படுகிறது.
நிலைமையை சமாளிக்க கொழும்பு மற்றும் மத்திய Nugegoda காவல் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் சில மணி நேரங்கள் ஊரடங்கு உத்தரவு அமலானது. ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ள போதிலும், பதற்றம் நீடிப்பதால், முக்கிய சாலைகள், இடங்களில் தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, போராட்டத்திற்கு பின்னணியில் தீவிரவாதிகள் குழுக்கள் செயல்படுவதாகவும், ஆயுதங்கள் ஏந்திய கும்பல் போராட்டக்காரர்களுக்கு இடையே புகுந்து வன்முறையை தூண்டிவிட்டதாகவும் இலங்கை அரசு குற்றம்சாட்டியுள்ளது.
அதிபர் கோத்தபய ராஜபக்சே இல்லத்திற்கு சென்ற பிரதமர் மகிந்த ராஜபக்சேவும், அந்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் நமல் ராஜபக்சேவும் அதிபரை சந்தித்து பேசினர். மேலும் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவது குறித்தும் ஆலோசனை நடத்தினர்.
Comments