இலங்கை அதிபருக்கு எதிராக வலுக்கும் போராட்டம்.. அதிபர் இல்லம் முன் போலீசார், ராணுவ வீரர்கள் குவிப்பு
இலங்கையில் அதிபர் மாளிகை முன் பொது மக்கள் கலவர போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து தலைநகர் கொழும்புவின் பல்வேறு இடங்களில் ஊரடங்கு கட்டுபாடுகள் அமல்படுத்தப்பட்டன.
பொருளாதார நெருக்கடியை கண்டித்து மிரிஹானவில் உள்ள அதிபர் இல்லத்தை முற்றுகையிட முயன்ற மக்கள் போலீசாருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். காவல் வாகனத்திற்கு தீ வைத்து கொளுத்திய மக்கள் போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் மீது கற்களை வீசி கலவர போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் பொது மக்களை, ராணுவ வீரர்கள் விரட்டியடித்தனர். தாக்குதலில் செய்தியாளர்கள் உள்பட பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்புவின் பல்வேறு இடங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு மறு உத்தரவு வரும் வரை மக்கள் வெளியே வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. அதிபர் மாளிகை பகுதியே கலவர பூமி போல் காட்சி அளிக்கிறது.
Comments