பிரதமருடன் முதலமைச்சர் சந்திப்பு.. 14 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தல்
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், இலங்கை தமிழர்களுக்கு தமிழக அரசு நேரடியாக உதவிட அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்.
மூன்று நாள் பயணமாக டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் வைத்து, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அப்போது, ஏப்ரல் 2-ந் தேதி டெல்லியில் திறக்கப்படும் திமுக அலுவலக திறப்பு விழாவுக்கு வருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதற்கான அழைப்பிதழை வழங்கினார்.
தொடர்ந்து, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும், மேகதாதுவில் கர்நாடகா அணைகட்ட அனுமதிக்கக் கூடாது, ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
மேலும், கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை தமிழர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், மருத்துவ உதவிகளை தமிழக அரசு நேரடியாக வழங்கிட அனுமதிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. டி.ஆர்.டி.ஓ. எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்கான ஆய்வுக்கூடத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும், புதிய ரயில்வே திட்டங்களை அறிமுகம் செய்ய வேண்டும்.
உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் இந்தியாவிலேயே மருத்துவப் படிப்பை தொடர வழிவகை செய்ய வேண்டும், நியூட்ரினோ திட்டத்தை கைவிட வேண்டும், குருவிக்காரர்கள் சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் மனுவில் இடம்பெற்றுள்ளன.
பிரதமருடனான சந்திப்பை அடுத்து மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்து பேசினார்.
Comments