பிம்ஸ்டெக் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பேச்சு
நாடுகளிடையான தொடர்பு, வளம், பாதுகாப்பு ஆகியவற்றுக்கான இணைப்புப் பாலமாக வங்கக் கடலை உருவாக்க வேண்டிய காலம் வந்துவிட்டதாக பிம்ஸ்டெக் மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிம்ஸ்டெக் எனப்படும் வங்கக் கடலோர நாடுகளின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான மாநாட்டை இலங்கை நடத்துகிறது. இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் பிரதமர் மோடி காணொலியில் பங்கேற்றுப் பேசினார். அப்போது, நாலந்தா பன்னாட்டுப் பல்கலைக்கழகத்தில் உள்ள பிம்ஸ்டெக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தை நீட்டிக்கவும் விரிவாக்கவும் செயலாற்றி வருவதாகத் தெரிவித்தார். குற்றவியல் விவகாரங்களில் சட்ட உதவி வழங்குவது தொடர்பான உடன்பாடுகள் கையொப்பமாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஐரோப்பாவில் அண்மைக்கால நிகழ்வுகள் உலக ஒழுங்கின் நிலைத்தன்மை குறித்து வினாக்களை எழுப்பியுள்ளதாகவும், இந்தச் சூழலில் மண்டல ஒத்துழைப்பைக் கொண்டிருப்பது அதிக முன்னுரிமையாக மாறியுள்ளதாகவும் தெரிவித்தார். பிம்ஸ்டெக் நிறுவனக் கட்டமைப்பை உருவாக்கும் சாசனத்தை உறுப்பு நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பிம்ஸ்டெக் செயலகத்துக்கு இந்தியா 7 கோடியே 57 இலட்ச ரூபாயை வழங்கும் எனத் தெரிவித்தார். நாடுகளிடையான தொடர்பு, வளம், பாதுகாப்பு ஆகியவற்றுக்கான இணைப்புப் பாலமாக வங்கக் கடலை உருவாக்க வேண்டிய காலம் வந்துவிட்டதாகவும் தெரிவித்தார். இலக்குகளை அடையப் புதிய உற்சாகத்துடன் பணியாற்றும்படி பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளைப் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
Comments