ராணிப்பேட்டையில் அபாயச் சங்கிலியை பிடித்திழுத்து இரயிலை நிறுத்திய பயணி.. கழிவறை சுத்தமாக இல்லையென அதிகாரிகளுடன் வாக்குவாதம்.!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே இண்டர்சிட்டி அதிவிரைவு ரயில் வண்டியில் கழிவறை சுத்தமாக இல்லையெனக் கூறி அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய பயணியால் சுமார் 25 நிமிடங்கள் ரயில் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது.
கோயம்புத்தூரிலிருந்து சென்னை சென்ட்ரல் வரை செல்லும் இண்டர்சிட்டி அதிவிரைவு ரயில் மதியம் 12.22 மணிக்கு அரக்கோணம் ரயில் நிலையம் வந்து நின்று பிறகு புறப்பட்டது. நடைமேடையைக் கடந்து சென்ற ரயில் திடீரென மீண்டும் நின்றது.
முன்பதிவு செய்யப்பட்ட குளிர்சாதன பெட்டியில் பயணித்த பிரசாந்த் என்பவர் ரயிலின் அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்து நிறுத்தியது தெரியவந்தது.
அந்த பெட்டியில் கழிவறை சுத்தமாக இல்லை என்றும் அதனால் அதனை பயன்படுத்த முடியாமல் 4 மணி நேரமாக அவதியுற்று வருவதாகவும் கூறினார்.
கழிவறை சுத்தமாக இல்லையென ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நேரடியாகவும் ஆன்லைன் வாயிலாகவும் புகாரளித்ததாகக் கூறிய பிரசாந்த், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால் அபாயச் சங்கிலியை இழுத்ததாகக் கூறினார்.
Comments