மகளிர் முன்னேற்றத்திற்கு தொடர் நடவடிக்கை - பிரதமர் மோடி
பொருளாதார ரீதியாக மகளிரை முன்னேற்ற மத்திய அரசு தொடர் நடவடிக்கை எடுக்குமென பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 5 லட்சத்து 21 ஆயிரம் வீடுகளை உரியவர்களிடம் ஒப்படைக்கும் விழா நடைபெற்றது.இதில் பங்கேற்று வீடுகள் ஒப்படைத்து காணொலி மூலம் பேசிய பிரதமர் மோடி, பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஆண்ட அரசு, அதன் ஆட்சி காலத்தில் சில லட்சம் வீடுகளை மட்டுமே ஏழைகளுக்காக கட்டி கொடுத்து இருந்தது என்றார். ஆனால் பா.ஜ.க அரசு இப்போது இரண்டரை கோடி வீடுகளை கட்டி கொடுத்துள்ளதாக அவர் கூறினார்.
கிராமங்களில் உள்ளவர்களுக்கு என்று இரண்டு கோடி வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். கொரோனா தொற்று காலத்தில் கூட கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்றதாக அவர் கூறினார்.
மத்திய அரசு கட்டிக் கொடுத்துள்ள இரண்டரை கோடி வீடுகளில், இரண்டு கோடி வீடுகள் மகளிரின் பெயரில் உள்ளதாக அவர் கூறினார். இதன் மூலம் வீடுகளில் மகளிர் நிதி மேலாண்மை குறித்த முடிவு எடுக்கும் வலிமையை அரசு அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். அரசின் இந்த நடவடிக்கை இப்போது உலகின் பல பல்கலைகழங்களில் ஆய்வுக்கு உள்ளாகி உள்ளதாக அவர் தெரிவித்தார்.
பல அரசியல் கட்சிகள் வறுமையை ஒழிக்கப்போவதாக முழக்கங்களை எழுப்பி விட்டு,ஏழைகளுக்கு எதுவும் செய்யவில்லை என்று அவர் கூறினார். ஏழைகளுக்கு அதிகாரம் அளிப்பது வறுமை ஒழிப்பிற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட ஊக்குமளிக்குமென தாம் நம்புவதாக பிரதமர் குறிப்பிட்டார். நேர்மை மிகுந்த அரசு ஏழைகளுக்கு அதிகாரம் அளிக்க எடுக்கும் நடவடிக்கைகளால் தான் வறுமை ஒழியுமென பிரதமர் மோடி தெரிவித்தார்.
Comments