திண்டுக்கல்லில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 3 பேர் காயம்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 3 பேர் காயமடைந்தனர்.
வீரக்கல் கிராமத்தில் திம்மராய பெருமாள் என்பவர் கடந்த 30 ஆண்டுகளாக பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். திருவிழா, சுபகாரியங்களுக்கு இங்கு பட்டாசுகள் தயாரித்து கொடுப்பது வழக்கம்.
சிறிய கட்டிடத்தில் இயங்கி வந்த இந்த ஆலையில் காலை வழக்கம் போல் 3 பணியாளர்கள் பூச்சட்டி எனப்படும் புஸ்வானம் தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். தயார் செய்த புஸ்வானங்களை வெயிலில் உலர்த்துவதற்காக வெளியில் வைத்துள்ளனர்.
10 நிமிடங்களுக்கு மேல் வெயிலில் அவற்றை காய விடக்கூடாது என்று கூறப்படும் நிலையில், வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்ததால் புஸ்வானங்களில் ஒன்று தீப்பற்றியதாகக் கூறப்படுகிறது.
மளமளவென தீ பரவியதில் அங்கிருந்த பட்டாசுகள் அனைத்தும் வெடித்துச் சிதறத் துவங்கியுள்ளன. இதில் அங்கு பணியில் இருந்த 3 பேரும் காயங்களுடன் தப்பினர். தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்த நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments