ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் உயிரைப் பறித்த குழி..! சிசிடிவி காட்சியை காணவில்லை
சென்னை மூலக்கடை ரவுண்டானா அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஒருவர், மூடப்படாமல் கிடந்த குடிநீர் வடிகால் வாரியம் வெட்டிய குழியில் விழுந்து தூக்கி வீசப்பட்டு பலியானதால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் விக்னேஷ். இவரது மனைவி சோபனா. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில் இவர்கள் இருவரும் ரெட்டேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த விக்னேஷ் , ஆம்புலன்ஸின் சாவியை மறந்து போய் வீட்டிற்கு எடுத்து வந்து விட்டதாக கூறப்படுகின்றது. இதையடுத்து ஆம்புலன்ஸ் சாவியை திருப்பிக் கொடுப்பதற்கு வீட்டில் இருந்து இரவு புறப்பட்டு சென்றுள்ளார். வேகமாக சென்ற விக்னேஷ் மூலக்கடையில் இருந்து மாதவரம் செல்லும் ரவுண்டானா சாலையில் வந்த போது அங்கு குடிநீர் வாரிய பணிக்காக தோண்டப்பட்டகுழியில் விழுந்து தூக்கி வீசப்பட்டதில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானதாக கூறப்படுகின்றது.
உடனே இதுகுறித்து சாலையில் சென்ற பொதுமக்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்ததின் பெயரில் மாதவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், போலீசாரின் தகவலின் பேரில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் விரைந்து அந்த குழியை அவசர அவசரமாக மூடிவிட்டு சென்றுள்ளனர்
இதனையடுத்து விக்னேஷ் உறவினர்கள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விக்னேஷ் விபத்தில் சிக்கிய சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஒப்படைப்பதாக கூறி அவர்களை சமரசப்படுத்தி, உடலை பிணக்கூறாய்வுக்காக் அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் அந்த இடத்தில் இருந்த சிசிடிவி காமிரா மட்டும் வேலை செய்யவில்லை என்று கூறி உள்ள போலீசார், விக்னேஷ் பள்ளத்தில் விழுந்ததால் தான் விபத்தில் சிக்கி பலியானாரா ? அல்லது அடையாளம் தெரியாத வாகனங்கள் ஏதேனும் இடித்து சென்று விட்டதா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறியதால் உறவினர்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.
இதற்கிடையே குடிநீர் வாரியத்திற்கு தோண்டப்பட்ட பள்ளம் சரிவர மூடப்படாததும், அங்கு முறையான தடுப்பு வேலிகளை வைக்காததும் இந்த விபத்துக்கு காரணம் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தாலும் , விக்னேஷ் தலைகவசம் அணியாமல் வேகமாக வாகனம் ஓட்டிச்சென்றது அவரது உயிரிழப்புக்கு காரணம் என்று போலீசார் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
Comments