தறிகெட்டு பாய்ந்த XUV7oo சென்டர் மீடியனை தாண்டி மருத்துவர் பலியான சோகம்..! இடையில் புகுந்த பாதசாரியால் விபரீதம்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே திடீரென்று குறுக்கே வந்த நபரை காப்பாற்றுவதற்காக அதிவேகத்தில் வந்த மகேந்திரா xuv 7 டபுள் ஓ வாகனத்தை கட்டுப்படுத்த முயன்ற போது, அது சாலையின் தடுப்பை தாண்டி தறி கெட்டு ஓடி மற்றொரு காருக்கு குறுகே பாய்ந்ததில், அந்த காரில் சென்ற மருத்துவர் உடல் நசுங்கி பலியான சம்பவம் நடந்துள்ளது.
சென்னையை சேர்ந்த இசாக் என்பவர் பெங்களூரில் இருந்து சென்னைக்கு ஆம்பூர் வழியாக தனது புத்தம் புதிய எக்ஸ்.யூ.வி. 7 டபுள் ஓ காரில் சென்று கொண்டிருந்தார். கார் ஆம்பூர் அடுத்த அய்யனூர் அருகே அதிவேகமாக வந்த போது எதிர்பாரத விதமாக செண்டர் மீடியனில் இருந்து குதித்த நபர் ஒருவர் வேகமாக சாலையை கடந்தார்.
அந்த நபர் மீது மோதாமல் இருப்பதற்காக அதிவேகத்தில் வந்த தனது காரை பிரேக் அடித்து திருப்ப முயன்றார். ஆனால் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய கார் சென்டர் மீடியன் மீது ஏறி எதிர்புறம் உள்ள சாலையின் குறுக்கே பாய்ந்தது. இதில் அந்தவழியாக வந்து கொண்டிருந்த மாருதி சுசுகி ரிட்ஸ் என்ற கார் , சாலையின் குறுகே பாய்ந்த XUV7 டபுள் ஓ காரின்வலது பக்கத்தில் மோதியது. மோதிய வேகத்தில் ரிட்ஸ் கார் அப்பளம் போல நொறுங்கியது அந்தகாரை ஓட்டிவந்த நறுவி மருத்துவமனை மருத்துவர் சிவக்குமார் என்பவர் உடல் நசுங்கி பலியானார்
இசாக் ஓட்டி வந்த காரில் பயணித்த இரண்டு பெண்கள் காயங்களுடன் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விபத்தை ஏற்படுத்தியவர்களை காவல்துறையினர் தேடி வருவதாக தெரிவித்துள்ள நிலையில், அவர்கள் மூவரையும் சொகுசு கார் ஒன்றில் வந்த தொழில் அதிபர் ஒருவர் தனது வாகனத்தில் ஏற்றி சென்னைக்கு அனுப்பி வைத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
சாலையில் முறையாக காரை ஓட்டிக் கொண்டு சென்ற மருத்துவர், கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதே நேரத்தில் நெடுஞ்சாலையில் வரும் காரின் வேகத்தை அறியாமல் சாலையை கடப்பதற்காக திடீரென காரின் குறுக்கே பாய்ந்த நபர் ஒரு காரணம் என்றால் 200 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று பிரேக் அடித்தாலும் விபத்தில் சிக்காது அப்படியே நிற்கும் என்று விளம்பரப்படுத்தப்பட்ட மகிந்திரா நிறுவனத்தின் XUV7 டபுள் ஓ கார் பிரேக் அடித்தும் நிற்காமல் தறிகெட்டு ஓடி மத்திய சாலை தடுப்பை தாண்டி எதிர் சாலையில் புகுந்தது சிறிய ரக கார் விபத்தில் சிக்கி மருத்துவர் உயிரிழப்பதற்கு முக்கிய காரணமாகிவிட்டது.
Comments